விழுப்புரம்: செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழிச் சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையை 6 வழிச்சாலை

சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்து வருகின்றன. இதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் நீடித்து வருகிறது. சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்குள் வந்து செல்கின்றன. காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக மோசமாக இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கத்தால் வாகனங்களும் பெருகிவிட்டன. இதனால் சென்னை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பீக் அவர்ஸ் என சொல்லப்படும் அலுவலகம், பள்ளி செல்லும் மற்றும் திரும்பும் நேரங்களில் சாலைகளில் இடைவெளியை பார்க்க முடியாத அளவுக்கு வாகனங்களாக சென்று கொண்டிருக்கும். ஏதாவது ஒரு இடத்தில் வாகனங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஜாம் ஆனால் சென்னை சாலைகள் மொத்தமாக ஸ்தம்பித்து விடும்.

உதாரணமாக பெருங்களத்தூரில் வாகனங்கள் கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் ஒரு 5 நிமிடம் ஜாமாகி நின்று விட்டால், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நகர முடியாமல் நின்று விடும். இதனால் பொதுமக்களால் குறித்த நேரத்துக்கு சேர வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாது. இதற்கு ஒரே தீர்வு சாலைகளை விரிவாக்கம் செய்வதுதான். செங்கல்பட்டு- திண்டிவனம் இடையே 67.1 கி.மீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலையாக உள்ளது. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து மற்றும் நெரிசல் காரணமாக இந்த சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.3,853 கோடி செலவில் செங்கல்பட்டு-திண்டிவனம் இடையிலான 67.1 கி.மீ. ஜிஎஸ்டி சாலையை, இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், ECR இசிஆர் பிரிவின் மரக்காணம்-புதுச்சேரி இடையிலான 47 கி.மீ தொலைவை ரூ.1,943 கோடி முதலீட்டில் 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.

செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழிச் சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு தாமதம்

செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழிச் சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் இருந்து கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை செல்வதற்கு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பலரும் பிரதானமாக பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி இடையே,போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்தம் 68 கி.மீ., நீளமுள்ள இந்த சாலையில், 30 இடங்களில் சாலை சந்திப்புகள் உள்ளன. மேலும், 33 இடங்கள், விபத்து கரும்புள்ளி பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. விபத்துகளை கட்டுப்படுத்தவும், சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், பரனுார் சல்வாதி இடையே, தற்போதுள்ள நான்கு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
 
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரத்தில் கூறப்படுவதாவது: செங்கல்பட்டு - திண் டிவனம் ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு, விரி வான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இப்பணிக்கு, 2,600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. புலிப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் சந்திப்பு ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளன.
 
முக்கிய சந்திப்புகளில், 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், 10 இடங்களில் தரைப்பாலங்கள் விரிவாக்கமும், 14 இடங்களில் மறுகட்டுமானமும் செய்யப்பட உள்ளன. இதற்கு, தமிழக அரசும், மாநில நெடுஞ்சாலைத் துறையும் முழு ஒத்துழைப்பு அளிப்பதால், நிலம் கையகப்படுத்தும் பணியில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்க தாமதித்து வருகிறது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தால், அதற்கான நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் நடைமுறை. ஆனால், திட்ட அறிக்கையை பெற்ற ஆணையம், அதை கிடப்பில் வைத்து விட்டது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படு கிறது.