"செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 2,18,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மதுராந்தகம் தொகுதியில் 26 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்."

Continues below advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision)

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 01.01.2026-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) பணியானது 04.11.2025 முதல் நடைபெற்று வந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில், இறந்த நபர்கள், இரட்டைபதிவு, இடம் பெயர்ந்த மற்றும் கண்டறிய முடியாத வாக்காளர்களின் உத்தேச பட்டியல் (Tentative) பகுதி வாரியாக அச்சிட்டு அலுவலர்களிடம் வழங்க வழங்கப்பட்டது.

7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. எட்டு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 27,87,362 வாக்காளர்களில் 7,01,901 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், மாவட்டத்தின் இறுதி வாக்காளர் எண்ணிக்கை 20,85,464 ஆகக் குறைந்துள்ளது.

எந்தத் தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்?

அதிகபட்சமாக, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 2,18,444 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சோழிங்கநல்லூரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,02,450-லிருந்து 4,84,005 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், பல்லாவரம் தொகுதியில் 1,49,789 பேரும், தாம்பரம் தொகுதியில் 1,21,137 பேரும், செங்கல்பட்டு தொகுதியில் 1,06,270 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மற்ற தொகுதிகளான திருப்போரூரில் 47,558 பேரும், செய்யூரில் 32,394 பேரும், மதுராந்தகத்தில் 26,309 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்தச் சீரமைப்புக்குப் பிறகு, வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் பட்டியலில் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தேர்தல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தவறான முறையில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தால் மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.