செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு, தற்போது பயன்பாட்டிற்கு உகந்ததல்ல எனத் தீர்மானிக்கப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 காவல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஏலம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்
வருகின்ற 05.03.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 11:00 மணி அளவில், செங்கல்பட்டு ஆயுதப்படை வளாகத்தில் இந்தத் திறந்த நிலை பொது ஏலம் நடைபெற உள்ளது. இந்த வளாகமானது செங்கல்பட்டு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்புறம் மற்றும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
வாகனங்களின் விவரம்
இந்த ஏலத்தில் மொத்தம் 9 வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஆறு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 3 இரண்டு சக்கர வாகனங்கள் வாகனங்கள அனைத்தும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் இருந்து, தற்போது முறையாக கழிவு செய்யப்பட்டவை ஆகும்.
வாகனங்களைப் பார்வையிடுதல்
ஏலம் எடுக்க விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், ஏலத்திற்கு முன்னதாக வாகனங்களின் தரம் மற்றும் நிலையை நேரடியாகக் கண்டறிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 04.03.2026 அன்று மாலை 03:00 மணி வரை ஏலம் நடைபெறும் செங்கல்பட்டு ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதிவு மற்றும் முன்பணம் செலுத்தும் முறை
ஏலம் நடைபெறும் தினமான 05.03.2026 அன்று காலை 09:00 மணி முதல் 11:00 மணிக்குள் ஏல இடத்திலேயே தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற, ஒவ்வொரு நபரும் ரூபாய் 5,000/- (ஐந்தாயிரம் மட்டும்) முன்பணமாகச் செலுத்த வேண்டும்.
பதிவு செய்யும் போது, ஏலதாரரின் முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம்) நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏலம் முடிவடைந்தவுடன், வாகனத்தை ஏலம் எடுக்காத நபர்களுக்கு அவர்கள் செலுத்திய முன்பணம் உடனடியாகத் திருப்பி அளிக்கப்படும்.
முக்கிய விதிமுறைகள்
ஏலத்தில் ஒரு வாகனத்தை வெற்றிகரமாக எடுத்த நபர், அந்த ஏலத்தொகையுடன் கூடுதலாக 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) சேர்த்து முழுத் தொகையையும் உடனடியாக ரொக்கமாகவே செலுத்த வேண்டும். முழுத் தொகையையும் செலுத்திய பின்னரே ஏலம் எடுத்த வாகனத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வாகன ஆர்வலர்கள் மற்றும் பழைய வாகன வியாபாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஏல நடைமுறைகள், அனைத்தும் வெளிப்படையான முறையில் நடைபெறும் என செங்கல்பட்டு காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
