செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், வரும் ஜூலை 17, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று பிரம்மாண்ட சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

Continues below advertisement

5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்கின்றன. தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான மனிதவளத்தை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.

கல்வித் தகுதியும் வயது வரம்பும்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் (Degree Holder), பொறியியல் பட்டதாரிகள் (B.E), ஐ.டி.ஐ (ITI) மற்றும் டிப்ளமோ (Diploma) முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம். இது தவிர, சிறப்புத் துறைகளான செவிலியர்கள் (Nurses), மருந்தாளுநர் (Pharmacist), மற்றும் ஆய்வக உதவியாளர்கள் (Lab Assistants) போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இம்முகாமில் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்துகொண்டு தங்களுக்குரிய வேலைவாய்ப்பினைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில் பங்கேற்க 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

Continues below advertisement

முற்றிலும் இலவசம் - ஆன்லைன் பதிவு விவரம்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் அனுமதி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் முன்னதாகவே தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்

தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுயவிவரக் குறிப்பு (Resume/Biodata) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் 17.07.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணிக்குள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் வருகை தந்து முகாமில் பங்கேற்கலாம்.

முகவரி: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், 'டி' பிளாக் (D-Block), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், செங்கல்பட்டு.

வேலைவாய்ப்பு பதிவு ரத்தாகாது!

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணி நியமனம் பெறுகின்ற வேலைநாடுநர்களின் அரசு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு (Employment Registration) எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்கள் எந்தவித தயக்கமும் இன்றி இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்

இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேலைநாடுநர்கள் 044-27426020 என்ற நிலத்தொலைபேசி எண்ணிலோ அல்லது 9499055895 / 9486870577 / 8248185171 / 8122140214 ஆகிய கைபேசி எண்களையோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனமாவட்ட ஆட்சித்தலைவர் மு.வீரப்பன், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.