இந்தியாவில் இருக்கும் பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவர் செஃப் தாமு என்ற கோதண்டராமன் தாமதோரன். 40 வருடங்களுக்கும் அதிகமாக உணவு வழங்கல் துறையில் அனுபவம் பெற்றிருக்கும் தாமு 20 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவராகவும் உலக சமையல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 


இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாளும் 1 கோடியே 60 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் சத்துணவு திட்டத்தில் புதிய மெனு வகைகளை அறிமுகப்படுத்திய பெருமை தாமுவுக்கு உண்டு. இதற்காக 1.5 லட்சம் பெண் சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இத்திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.  


24 மணி நேரத்தில் 617 வகையான உணவுகளை சமைத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கும் தாமு ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் தொடர்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று சமூக வலைதளங்களிலும் பிரபலம்.




இந்நிலையில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அன்று லண்டனில் நடைபெற இருக்கும் உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சியில் செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் லண்டன் உலகத் தமிழ் அமைப்பு இந்த விருதை அவருக்கு வழங்குகிறது.


விருது பெறுவது குறித்து பேசிய செஃப் தாமு, "என்னுடைய பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். இந்த பிரிவில் முதல் விருதை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும். இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும்.  கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு இது மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.