6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன். 29 வயதாகும் விவசாயியான இவருக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகள் மகாலட்சுமி ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். தொடக்கத்தில் நட்பாக பழகிய நிலையில் பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசினர். நேரில் முகம் பார்க்காமல்  ஃபேஸ்புக் மூலமாக இவர்கள் காதல் வளர்த்துள்ளனர்.


இதையடுத்து காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மணிகண்டன் முடிவு செய்தார். அவர், மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு மகாலட்சுமியும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அப்போது, திருமணத்தின் போது தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை என்றும் தான் மட்டும் தனது வீட்டை விட்டு வருவதாகவும் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி, இவர்களது திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது. இத்திருமணத்தில் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மகாலட்சுமி தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. திருமணத்தின் போது, மணிகண்டன் வீட்டில் இருந்து மகாலட்சுமிக்கு 8 சவரன் நகை போட்டுள்ளனர். 


இல்லற வாழ்வில் மகிழ்ச்சியுடன் அடியெடுத்து வைத்த மணிகண்டனின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திடீரென்று ஒருநாள் தான் வீட்டில் சொத்து பிரச்சனை உள்ளதாக போன் வந்ததாகவும், வீட்டிற்கு சென்று அந்த பிரச்சனையை தீர்த்துக் கொண்டு திரும்பி வருவதாகவும் கூறிவிட்டு மகாலட்சுமி சென்றுள்ளார்.  காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய அவரும், ஊருக்கு சென்றுவிட்டு விரைவில் திரும்பி வந்துவிடு என்று வழிஅனுப்பி வைத்துள்ளார். திருமணமான 26-வது நாள், மகாலட்சுமி, மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறி சென்றார். சொந்த ஊருக்கு சென்ற காதல் மனைவி எப்போது திரும்பி வருவார் என மணிகண்டன் காத்திருந்தார். மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போனை எடுக்கவில்லை.


இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதன் பின்னர் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் எழுந்துள்ளது. ரூ.1 லட்சம் பணத்தை  திருடிக்கொண்டு, திருமணத்தின் போது அணிவித்த 8 பவுன் நகையுடன் மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாரா? என்று மணிகண்டனுக்கு சந்தேகம் வந்தது. இதனையடுத்து மணிகன்டன் மகாலட்சுமிக்கு போன் செய்த போது, மகாலட்சுமி அழைப்பை ஏற்று பேசியுள்ளார். ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை. நகை, பணம் குறித்து கேட்ட போது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


காதல் மனைவியின் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத மணிகண்டன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  பின்னர், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வளத்தி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். தனிப்படை  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மகாலட்சுமியின் புகைப்படம், முகநூல் பக்க பதிவுகள், அவரது செல்போன் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர். அதில், அவர் சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து, மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். 


விசாரணையில், மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும்,  5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர்  மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே கொண்டிருந்துள்ளார். இந்த நகை, பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். மணிகன்டன் வீட்டில் இருந்து நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததுள்ளார். 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32.  மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர், யாருடைய பராமரிப்பில் உள்ளார்கள் என்பது குறித்து மகாலட்சுமி போலீசில் தெளிவாக தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.