பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சதுர்வேதி சாமியார் ஆஜராக வேண்டும் என சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னை தியாகராய நகர் பகுதியில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்னும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் வெங்கட சரவணன். இவரை சதுர்வேதி சாமியார் என சொன்னால் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று டிரஸ்ட் அலுவலகத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்றி பிரபலமானார். 


இவருக்கு ஏராளமான பெண் பக்தர்கள் உண்டு. இப்படியான நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க சதுர்வேதியை நாடியுள்ளார். இதற்காக அவர் வீட்டுக்குள் சென்ற சதுர்வேதி சாமியார், கீழ்தளத்தில் தொடர்ந்து வசிக்க தொடங்கியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த தொழிலதிபரின் மனைவியையும், மகளையும் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


இது தொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சதுர்வேதி சாமியார் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குண்டர் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு இதே வழக்கில் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார் 


சென்னை மகளிர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் தொடர் விசாரணையும் நடந்து வந்தது. இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த சதுர்வேதி சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்பதே இதுவரை தெரியவில்லை. 


2018 ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதுவரை வழக்கு விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்து வரும் சதுர்வேதி சாமியார் ஜூலை 31 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.