DGP Sylendra Babu : சென்னையில் நடந்த உயர் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டிஜிபி சைலேந்திர பாபு.
"இதுவே எனது கடைசி போட்டி”
தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை அபிராமபுரத்தில் உள்ள கமாண்டோ படை வளாகத்தில் துப்பாக்கி சுடும் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் காவல்துற தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு சாம்பியன் பதக்கம் மற்றும் கோப்பையை வென்றார். திருவண்ணமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இரண்டாம் இடம் பிடித்தார்.
துப்பாக்கி சுடும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "உயர் அதிகாரிகளுக்கிடையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றேன். இதுவே எனது துறையில் கடைசி போட்டி” என்று பதிவிட்டிருந்தார்.
ஓய்வு பெறும் சைலேந்திர பாபு
திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டின் டிஜிபியாக திரிபாதி இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவயடைய இருந்த நிலையில், அடுத்த டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க பல்வேறு யுத்திகளை கையாண்டார். இதற்காக பல்வேறு ஆப்ரேஷன்களை செயல்படுத்தினார். மேலும், ஆன்லைன் பண மோசடிகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சைபர் கிரைம் குற்றங்கள், ஆன்லைன் மோசடி உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த மாதம் ஓய்வு
இந்நிலையில், தற்போது அவரது பணிக்காலம் இந்த மாதத்தில் முடிவடைகிறது. பொதுவாக உயர் பதவிகளை வகிப்போர் ஓய்வு பெறும் ஒரு மாதத்திற்கு முன் சீனியாரிட்டி அடிப்படையில் 3 பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசு மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கும். அந்த மூன்று பேரில் ஒருவரை தமிழகத்தில் டிஜிபியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.
அதன்படி, தற்போது சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால், டெல்லி காவல் ஆணையராக இருக்கும் சஞ்சய் அரோரா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநரும் முன்னாள் சென்னை காவல் ஆணையருமான ஏ.கே.விஸ்வநாதன், ஊர் காவல் படை தலைவராக இருக்கும் பி.கே.ரவி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் ஆகிய 5 பேர் பட்டியலில் உள்ளனர்.
அடுத்த டிஜிபி யார்?
ஆனால், தமிழ்நாடு ஐபிஎஸ் கேடராக இருந்து மத்திய அரசின் சிறப்பு பரிந்துரை பேரில் டெல்லி ஐபிஎஸ் கேடராக சஞ்சய் அரோரா மாறிவிட்டதால், அவர் தமிழ்நாடு டிஜிபிக்கான பரிந்துரை பட்டியலில் இனி இடம் பெற முடியாது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அவர் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற வாய்ப்பு குறைவு. அதனால், பிகே ரவி, சங்கர் ஜிவால் மற்றும் ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரிடையே சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை பிடிப்பதில் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.