நெல்லின் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 20% உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


மழையால் பாதிக்கப்படும் நெற்பயிர்:


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் மழைநீரில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது. 


அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் 41 ஆயிரம் ஏக்கர், உளுந்து 1600 ஏக்கர் , நிலக்கடலை 1200 ஏக்கர்  மழைநீரால் சூழப்பட்டதாக வேளாண் துறையினர் எடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இதேபோல் திருவாரூரில் நெற்பயிர்கள் 27 ஆயிரம் ஏக்கர், 18 ஆயிரம் ஏக்கர் உளுந்து , கடலை 2,170 ஏக்கர் சேதமடைந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நாகையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 35 ஆயிரம் ஏக்கர் நெர்பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கர் உளுந்து மழையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.


இழப்பீடு:


இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, வேளாண் துறை செயலாளர், மூத்த அதிகாரிகள் குழு நேற்று பயிர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இந்த குழு அறிக்கை சமர்பித்ததை தொடந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 


தொடர்ந்து கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.


20 சதவீதமாக உயர்வு:


நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மத்திய அரசுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பத அளவை 17ல் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதினார். 


இதன்பின்னர் மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் நெல்லுக்கான ஈரப்பத அளவை 19%-ல் இருந்து 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.