ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 85% மானியம் தரும் அரசு.. மிஸ் பண்ணிடாதீங்க
Animal Insurance Subsidy: கால்நடை காப்பீடு திட்டம் மூலம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, தேசிய கால்நடை பராமரிப்புத்துறை 85% மானியம் வழங்குகிறது.

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு என்பது மிக முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்பது பொருளாதார ரீதியில் உதவி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆடு, மாடு மற்றும் எருமைகள் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடைகளுக்கு எதிர்பாராத விதமாக நோய் தாக்குதலுக்கு உள்ளானால், கால்நடை வளர்க்கும் குடும்பத்தில் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு விடுகிறது.
85 சதவீதம் மானியம்
இதனை கருத்தில் கொண்டு கால்நடை வளர்ப்பவர்கள், கால்நடைகளுக்கு காப்பீடுகளை செய்து கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை காப்பீடு திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 85% மானியத்தில் கால்நடைகளுக்கு காப்பீடுகள் வழங்கப்பட உள்ளது.
கால்நடைகளுக்கு காப்பீடு
கால்நடைகளுக்கு எதிர்பாராத விபத்து மற்றும் நோய் போன்றவற்றால், இறக்கும்போது மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதனால் தேசிய கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் அமலாகியுள்ளது.
மானியம் எப்படி வழங்கப்படுகிறது?
பல்வேறு வகைகளில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு வகை காப்பீடு திட்டத்தில், ஆண்டுக்கு ஒரு பசு மற்றும் எருமைக்கு காப்பீட்டு மானியமாக ஆண்டிற்கு 434 ரூபாய் தரப்பட உள்ளது. மீதம் 77 ரூபாய் கட்டினால் போதுமானது. 10 ஆடுகளுக்கு 423 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. மானியம் போக 10 ஆடுகளுக்கு 75 ரூபாய் கட்டினால் போதுமானது. 10 பன்றிகளுக்கு காப்பீட்டு மானியமாக 421 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மானியம் போக 74 ரூபாய் பயனாளி செலுத்தினால் போதுமானது.
மற்றொரு வகையில் ஒரு பசு அல்லது எருமைக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்பீடு செய்ய, ஆண்டிற்கு 680 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் 85 சதவீதம் மானியம் போக பயனாளி 102 ரூபாய் செலுத்தினால் போதும். இதேபோன்று 10 ஆடுகளுக்கு 565 மானியம் போக 100 ரூபாய் செலுத்தினால் போதுமானது. 10 பன்றிகளுக்கு 561 ரூபாய் மானியம் போக, 99 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?
இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை வளர்ச்சி துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எந்தவித கடைசி தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கால்நடை வளர்ப்பவர்கள் முடிந்த அளவு விரைவாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையோ அல்லது அலுவலகத்தையோ வணங்கி பயன்பெறுமாறு, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.