திமுகவின் மறைந்த முன்னாள் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஜூன் மாதம் 3-ஆம் தேதி முதல் இந்த அண்டு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம், மதுரை மாவட்டத்தில் நூற்றாண்டு நூலகம் ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. முக்கியமாக கடந்த மாதம் அனைவருமே மிகவும் எதிர்ப்பார்த்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததது. இப்படி அரசு தரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


அந்த வரிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மகளிர் அணி செயலாளர் கனிமொழி நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


இன்று நடைபெறும் இந்த பிரம்மாண்ட மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.






தேசிய அளவில் பல முக்கிய தலைவர்கள் வருகை தருவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக நேற்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றனர்.


குறிப்பாக, இந்த மாநாட்டில் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டில் பேச உள்ளனர். அதே போல், தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்குக் கட்டணமில்லா பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைத் திட்டங்கள் பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மகளிர் உரிமை மாநாட்டை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.