PM Modi: பல்லடத்தில் பக்தி பாடலை தாளமிட்டு கேட்டு ரசித்த பிரதமர் மோடியின் வீடியோ சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது. 


தமிழ்நாட்டில் பிரதமர் மோடி:


அடுத்த மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி.


கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி  குமார், பாடி ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.


விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு வந்தார். பல்லடம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்கள், மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நீலகிரி மலைவாழ் மக்கள் நெய்த சால்வையை பரிசாக கொடுத்தனர். இதனை அடுத்து, பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 


பக்தி பாடலை தாளமிட்டு கேட்டு ரசித்த மோடி:


நிகழ்ச்சி முடிந்த பிறகு, திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா மற்றும் அவரது  தாயார் சந்தித்து பேசினார்.  அப்போது, பிரதமர் மோடியின் முன் 'அச்யுதம் கேசவம்' மற்றும் ஒரு  தமிழ் பாடலை பாடினார்.  'அண்ணாமலையானே உந்தன் அன்பின் கலந்தோமே’ என்ற பாடலை கசாண்ட்ரா பாடினார். 






அந்த பாடலை பிரதமர் மோடி அருகில்  இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு கேட்டு ரசித்தார்.  பக்தி பாடலை தாளமிட்ட கேட்ட பிரதமர் மோடியின் வீடியோ சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "கசாண்ட்ரா மே ஸ்பிட்மேனின் இனிமையான குரல் பரவலாக அறியப்படுகிறது. பல்லடத்தில் அவரையும், அவரது அம்மாவையும் சந்தித்தேன்.


இந்திய கலாச்சாரம், இசை மற்றும் உணவு ஆகியவற்றின் மீது கசாண்ட்ராவின் காதல் பற்றி நாங்கள் பேசினோம். இந்த சந்திப்பில், தமிழில் சிவமயமாக என்ற பக்தி பாடலையும், 'அச்யுதம் கேசவம்'  என்ற பாடலை பாடியிருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.