அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அவருக்கு எதிராக தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் என்ன கோரப்பட்டுள்ளது.? பார்க்கலாம்.
“அண்ணாமலையிடம் விசாரணை நடத்துங்கள்“
தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரன் வழக்கில், அவர் யாருடன் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும், அதனால், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடக்கத்தில் இருந்தே பல திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில், ஞானசேகரன் திமுக உறுப்பினர் என கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் திமுகவில் இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, ஞானசேகரன் போனில் பேசியதாக கூறப்படும் அந்த சார் யார் என கேட்டு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில்தான், ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியை மையமாகக் கொண்டு அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக்குழு வலியுறுத்தியதாகவும், ஆனால் இதுவரை அவரிடம் விசாரணை நடைபெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்துதான், தற்போது அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
அதைத் தொடர்ந்து, அவர் மீது 11 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, கடந்த மே மாதம் 28-ம் தேதி, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 90,000 ரூபாய் அபராதமும் விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கின் விசாரணை மிகவும் வேகமாக நடத்தப்பட்டு, 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ராஜலட்சுமி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளிக்கு மன்னிப்பு கிடையாது என்று கூறியதுடன், குற்றவாளியின் செயல்கள், மாணவியிடம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அண்ணாமலையிடம் விசாரணை கோரப்பட்டுள்ள நிலையில், அந்த மனு மீது விசாரணை நடைபெற்றால், அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.