தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பயன் பெறும் விதமாக மாவட்டம் தோறும் வழங்கப்பட்ட சலுகை விலை வீட்டு மனை பட்டா திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலால் பத்திரிகையாளர்கள் தமிழ்நாடு அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர்.


வெயில், மழை, புயல் என்றும் இரவு, பகல் என்றும் பாராமல் உழைக்கும் பத்திரிகையாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகவும் அறிவிக்கப்பட்ட சலுகை விலை வீட்டு மனை பட்டா திட்டம் பல்வேறு காரணங்களை சொல்லியும் புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியும் திருச்சி, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டிருப்பதும் மறுக்கப்பட்டிருப்பதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


திமுக ஆட்சி வந்தால் பத்திரிகையாளர்களின் உரிமைகள் காக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் பத்திரிகையாளர்கள் பலரும் தவித்து வருகின்றனர்.


பத்திரிகையாளர்களின் நல காக்க அமைக்கப்பட்ட நலவாரியமும் இந்த விவகாரத்தில் இதுவரை தலையிட்டு தீர்வு காண முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து திருச்சி பத்திரிகையாளர்கள் ஆதங்கம் பொங்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அதில்,


‘வணக்கம் முதல்வரே...தமிழகத்தை வளமாக்க நீங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கிறீர்கள்.


உங்கள் தலையீடு அவசியம் என்பதால் தொந்தரவு செய்கிறோம்.மன்னியுங்கள். முதல்வரே உங்களுக்கு நினைவிருக்கிறதா..?. அய்யா கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த 2008ம் ஆண்டு, அமைச்சரவையை கூட்டி, திருச்சியை சேர்ந்த 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் நிலம் விற்பது (அரசாணை (நிலை) எண்251. நாள் 16/05/2008) என முடிவெடுத்து பத்திரிக்கையாளர் வாழ்வில் ஒளியேற்றினார். உவகையில் திளைத்தோம்.


தாங்கள் துணை முதல்வராக பதவியேற்று முதன்முறையாக திருச்சி வருகை தந்த போது எங்கள் பத்திரிக்கையாளர் சங்க அலுவலகத்திற்கு வருகை புரிந்து வாழ்த்தி எங்களை மகிழ்வித்தீர்கள். அப்போது எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் இன்றும் எங்கள் வீடுகளில் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது.


இந்த நிலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயை அரசுக்கு செலுத்தினோம். அந்த நாட்களில் எங்களில் பலருடைய இரண்டு வருட ஊதியம் அது. மிகவும் சிரமப்பட்டு, சிலர் மனைவியின் தாலியை கூட அடகு வைத்து அந்தத் தொகையை செலுத்தினார்கள்.


இந்த நிலம் விற்பனைக்குறித்து இயற்றப்பட்ட அரசாணைகளிலேயே, மேற்படி நிலம் குளம் புறம்போக்கு என்பதால் பிரஸ்தாப நிலங்களை நத்தமாக வகை மாற்றம் செய்த பின்பு தான், மேற்படி நிலத்தை பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


அரசு உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றி இருப்பார்கள் என்று நாங்களும் நம்பினோம். ஆனால் அரசு உத்தரவை செயல்படுத்தாமலேயே அதிகாரிகள் எங்களுக்கு பட்டா கொடுத்துள்ளனர். அது மட்டும் இன்றி பாகம் பிரித்து எங்களுக்கு வரைபடம் கொடுத்த அதிகாரிகள் அதனை கிராமப் பதிவேட்டில் கூட ஏற்றவில்லை.


இதற்கு நடுவில் சண்டையும் சச்சரவும் புலவர்கள் கூட பிறந்தது என்பதை நிரூபிக்க, எங்களது சக தோழர்கள் வழக்கு தொடுக்க, தீர்ப்பு வரை காத்திருந்து சாதகமான தீர்ப்புக்குபின், ஆளுக்கு இயன்ற பணம் போட்டு,  நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மீண்டும் ஒரு வழக்கு. நிலத்தை சமன்படுத்த தடை. அமைதி காத்தோம்.


ஆட்சி மாறியது காட்சியும் மாறியது. என்ன தான் இருந்தாலும், நீங்கள் வழங்கிய இடம் அல்லவா?  முடிந்தவரை முட்டுக்கட்டைகள். இடம் குளம் புறம்போக்காக உள்ளதாலும், நத்தமாக அதிகாரிகளால் வகைப்படுத்தப்படாமலேயே பட்டா கொடுக்கப்பட்டது என்பதாலும், இந்த இடத்திற்கு மாற்று இடம் தருகிறோம் ஒரு மனு கொடுங்கள் என அப்போதைய ஆட்சியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சங்க நிர்வாகிகளும் கடிதம் கொடுத்தனர். மாற்று நிலம் கண்டறியப்பட்டது. ஆனால், இன்னமும் பட்டா தான் வரவில்லை. 15 வருட வரலாற்றை இன்னமும் சுருக்கமாய் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்.


பட்டா மீண்டும் வழங்கப்படாதால் இதுவரை 52 முறை சென்னை வந்து பல அதிகாரிகளை சந்தித்தோம். கோப்புகளையும் கையளித்தோம். ஆனால் ஒருவர் கூட எங்கள் கோரிக்கையை செவிமடுத்து கேட்கவும் இல்லை தீர்க்கவும் இல்லை.


ஒவ்வொரு முறையும் ஐயா,  'இடம் கேட்கவில்லை எங்களிடம் இருந்து மாற்று இடம் கொடுப்பதாக கூறி எடுத்துக் கொண்டீர்களே அதனைத் தான் கேட்கிறோம்' என மன்றாடினாலும், இதுவரை ஒருவர் கூட செவிமடுக்கவும் இல்லை, நாங்கள் கையளித்த கோப்புகளை திறந்து பார்க்கவும் இல்லை. தங்கள் அலுவலகத்தில் தங்களை சந்திக்க வந்தபோது கூட, அலுவலக வாயிலில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டோம்.


காலம் வேகமாக கடந்து விடுகிறது. நாங்கள் சந்தித்த அதிகாரிகள் போல அல்லாமல், காலன் கடமையை கச்சிதமாக செய்து விடுகிறார். எங்களோடு வீட்டுமனை வாங்கியோரில், எட்டு பேர் இன்று இல்லை.  தலைவனையும் தந்தையும் இழந்த அந்த குடும்பங்கள் நிர்கதியாய் நிற்கின்றன. வருமானம் இயற்றிய கணவரை இழந்து விட்டு குழந்தைகளுக்காக அந்த சகோதரிகள் படாத பாடுபட்டு வருகின்றனர்.



கடந்த ஆண்டு முதல்வரை சந்தித்த திருச்சி பத்திரிகையாளர்கள்


எனவேதான் துயர் குறைக்க அரசை நாடி வந்தனர். இந்த வீட்டுமனை குறித்தும் உடனடி நடவடிக்கை வேண்டியும், திருச்சி ஆட்சியரிடம், வீட்டுமனையை விலை கொடுத்து வாங்கியதற்கான சான்றுகளையும், காலி வீட்டு மனைக்கு முறையே வரி கட்டிய ரசீதுகளையும் கையளித்து முறையிட்டனர். இந்த மனு தீர்வுக்காக துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி அனுப்பப்பட்டு வந்த தீர்வுதான் அவர்களை இன்னமும் கலங்கடித்து இருக்கிறது முதல்வரே.


அப்படி என்ன... ஆச்சரியத்துடன் கேட்கத் தோன்றுகிறது தானே! எங்களுக்கும் தான்.'உங்கள் வீட்டுமனை பட்டா ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது. உங்களுக்கு மனையெல்லாம் கிடையாது. மனைக்காக 15 வருடங்களுக்கு முன்பு நீங்கள் அரசுக்கு செலுத்திய தொகை திருப்பி தரப்படும்'. எப்படி இருக்கிறது! கணவரை இழந்து கேள்விக்குறியான வாழ்வோடு, அரசிடம் வந்த இந்த மகளிருக்கு அதிகாரிகள் அளித்த பதில் தான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதுதான் தீர்வு உங்களுக்கு விருப்பமில்லை எனில் நீதிமன்றத்தை அணுகுங்கள் என அறிவுரை வேறு. நீதிக்கு நீதிமன்றம் செல்லத்தான் வேண்டும் என்றால், அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் இந்த அதிகாரிகள் எதற்கு.


முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூடி முடிவெடுத்து பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையையே சரியாக செயல்படுத்தாமல், உங்கள் நிலம் கிராம பதிவேட்டிலேயே பதியப்படவில்லை. ஆகையால் உங்களுக்கு நிலம் இல்லை என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.  கிராமப் பதிவேடு என்ன அந்த சகோதரிகள் எழுதி வைக்கும் மளிகை கணக்கு புத்தகமா? இவர்கள் பதியவில்லை என்று கூற.எல்லாவற்றிற்கும் மேல் நீதிமன்றம் போங்க.. என நக்கல் தொணியில் அறிவுரை வேறு. எதற்காக நீதிமன்றம் செல்ல...? குளம் புறம்போக்கு நத்தமாக வழிவகை செய்து ஒப்படைவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டும், அதனை செயல்படுத்தாமல் ஏமாற்றிய அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வா...?


அரசு கருவூலத்தில் உரிய பணம் செலுத்தி, அரசிடம் இருந்து விலைக்கு வாங்கிய வீட்டுமனையை கிராமப் பதிவேட்டில் பதியாமல் மோசடி செய்த அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கவா...? பணம் செலுத்தி, கிரயம் செய்யப்பட்ட வீட்டுமனையின் பட்டாவை சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட தெரிவிக்காமல் தன்னிச்சையாக ரத்து செய்த அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கவா...? காலி மனை வரி செலுத்தப்பட்ட இடத்திற்கு 'நீங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பணத்தை திருப்பித் தருகிறோம்' என உத்தரவிடும் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கவா...? எல்லாவற்றிற்கும் மேலாக அடுக்கடுக்கான தங்களின் தவறுகளால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாய் மன உளைச்சல் ஏற்படுத்தி வரும் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கவா...?


வாழ்ந்த காலமெல்லாம் பத்திரிக்கையாளராய் வாழ்ந்து, மறைந்தும் எங்களைப் போன்றோர் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா கலைஞர் அவர்களால் கொடுக்கப்பட்ட வீட்டுமனைகள் இவைகள். இன்று சில அதிகாரிகளின் கைகளில் சிக்கி சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. பணியின் பொருட்டு அடிக்கடி தங்களை சந்திக்கும் பேறு பெற்றவர்கள் தான் நாங்கள்.தங்கள் வருகையின் போது நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொது வெளியில் தங்களிடம் இதுவரை இது குறித்து பேசியதில்லை. தங்களை சங்கடப்படுத்தி விடக் கூடாது என்பதால். ஆனாலும் இப்போது நடப்பவை நல்லவைகளாக இல்லை ஆகவே தான் பொது வெளியில் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டியதாயிற்று. எனவே முதல்வரே... தாங்கள் இப் பிரச்சனையில் தலையிட்டு நீதி வழங்க வேண்டுகிறோம்.


வறுமை எங்களின் வாழ்க்கை துணை. எனவே நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால், கணவரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் சகோதரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தங்கள் கையால் அவர்களுக்கு மீண்டும் வீட்டுமனையை வழங்கிட வேண்டுகிறோம்'  என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


இதனைபோன்றே மதுரையிலும் கடந்த 2019ல் மதுரை சூர்யா நகரில்  பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை விலை வீட்டு மனை பட்டாவில் பயன்பெற்ற 86 பேரில் 38 பேரின் பட்டாக்களை முன்னாள் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பல்வேறு புதிய நிபந்தனைகளை குறிப்பிட்டு ரத்து செய்துள்ளார்.


இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,






முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் பத்திரிகையாளர்கள் வஞ்சிக்கப்படுவதாக குறிப்பிட்டும் பட்டா ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.






அரசின் அறிவிப்புகள் / திட்டங்களை பத்திரிகையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் சொல்லி செய்தி வெளியிட சொல்லும் அதிகாரிகளும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர்களும் வருவாய் துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர்களின் சிரமங்களை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.