புதுச்சேரி: புதுச்சேரியில் கால் சென்டர் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களம் மற்றும் செயலி தொடர்பாக புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

புதுச்சேரியில் லாஸ்பேட்டை , சாரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால் சென்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோல், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என கூறியும் சில அலுவலகங்கள் திடீரென போலியாக துவங்கப்பட்டுகிறது. ஆனால், அவைகள் போதிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவதாகவும், அதன் மூலம் பலரிடம் பணம் மோசடி நடப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கால் சென்டர் அலுவலகத்தில் புதுச்சேரி சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மத்திய, மாநில அரசின் அனுமதி பெறாமல் கால் சென்டர் இயங்கி வருவது தெரியவந்தது.

Continues below advertisement

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பி.பி.ஓ மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய, மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம். குறிப்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே, தங்கள் சேவையைத் தொடரவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் உடனடியாக மத்திய, மாநில அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதனை மீறும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனைத்து விதமான சைபர் குற்றங்கள் குறித்த புகார் மற்றும் தகவல்களை 1930 மற்றும் 0413-2276144, 9489205246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளதிலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்...

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.