தமிழகத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மார்ச் 2021 உடன் முடிந்த ஆண்டிற்கான சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் நலன் மற்றும் திறன்கள் மேம்பாட்டுத் துறை சார்பில் தொழிலாளர்களுக்கு 2 தங்கும் விடுதிகள் கட்டுவதற்காக ரூ.31.66 கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.


மார்ச் 2021 உடன் முடிந்த ஆண்டிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


“அண்ணா பல்கலைக்கழகத்தின்” விதிகளை மீறியதன் விளைவாக, கடைகள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்ததற்காக ரூ.11.41 கோடி அளவுக்கு முறைகேடான பணம் செலுத்தப்பட்டது. பட்டப்படிப்புச் சான்றிதழ்கள், கிரேடு/மார்க் ஷீட்டுகள் போன்றவைகளை டிஜிட்டல்மயமாக்குவதற்கானப் பணிகளைச் செய்வதற்காக   ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன.


அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும்  டெண்டரில் விதிமுறைகளை மீறி, குறிப்பிட்ட நிறுவனங்களை டிஜிட்டல்மயமாக்கல் பணிக்காக தேர்வு செய்திருக்கிறார் என்பதும் கண்டயறிப்பட்டுள்ளது. ஏலத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு உள்ளடக்கம் மற்றும் மின்னணு வழிக் கற்றல் போர்ட்டலின் மேம்பாட்டுக்காக கோரப்பட்ட டெண்டரில், டெண்டர் ஆவணங்களைத் தயாரிப்பதில் முறைகேடுகள், டெண்டர் மதிப்பீட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் ஒப்பந்ததாரர் வழங்கிய சேவையின் தரத்தை உறுதி செய்யத்தவறியது போன்ற காரணங்களால் ரூ.10.70 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது.


தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 2 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டதில் ரூ.31.66 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட இரண்டு தங்குமிடங்களும் எந்தவிதமான சர்வே எடுக்காமலும், கட்டுமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டும் கட்டப்படவில்லை. அவை பயன்படுத்தப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் மண்டல மேலாளர்களால் கொள்முதல் நடைமுறைகள் மீறப்பட்டதாலும் துறை ரீதியில் கட்டுப்படுத்த தவறியதாலும் ரூ.3.22 கோடி ஏற்றுக்கொள்ள முடியாத உரிமைக் கோரல்கள் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது


சீருடைகள் வழங்குவதில் வீண் செலவு


"72 மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 31,152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 49 மாதிரிப் பள்ளிகளில் 21,086 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.22 கோடி மதிப்பிலான சீருடைகள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டன.


மூன்று அரசு மருத்துவமனைகளின் தரப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் எம்ஆர்ஐ ஸ்கேனர்கள் பொருத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன் விளைவாக ரூ.1.12 கோடி தவிர்க்கப்பட வேண்டிய செலவினம் மற்றும் தேவைப்படும் நோயாளிகளுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் சேவைகள் தொடங்குவதில் ஓராண்டு காலம் தாமதம் ஏற்பட்டது.


நிலையான விவசாயத்தை உறுதிப்படுத்த தேசிய அளவிலான பணிகளைச் செயல்படுத்துவதில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன" என்று தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.