தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இயக்கப்படும் பேருந்துகளின் விபரம்
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் காலை முதல் 2,098 எம்.டி.சி பேருந்துகள் மாநகராட்சி முழுவதும் இயக்கப்பட்டுவருவதாக கோட்ட மேலாளர் அல்பி ஜான் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 700 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் 80 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சேலம் கோட்டம் மற்றும் விழுப்புரம் கோட்டம் ஆகிய இரு போக்குவரத்து பணிமனையில் உள்ளன. சேலம் கோட்டத்தில் மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 44 புறநகர் பகுதிகளிலும் 20 நகர் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் ஆகும். இப்படியான நிலையில் புறநகருக்கு 11 பேருந்துகளும், நகர் பகுதிகளுக்கு 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 25 பேருந்துகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 15 பேருந்துகள்தான் இயக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விழுப்புரம் பணிமனையில் இருந்து இயல்பு நாட்களில் மொத்தம் 119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 95 பேருந்துகள் புறநகர் பகுதிகளிலும் 24 பேருந்துகள் நகர் பகுதியில் இயக்கப்படுகின்றன. ஆனால் தற்போது புறநகர் பகுதிகளுக்கு 14 பேருந்துகளும் நகர் பகுதிகளுக்கு 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது வரை 48 பேருந்துகள் பணிமனையில் இருந்து சென்றிருக்க வேண்டும். ஆனால் 17 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளது. இதனால் 31 பேருந்துகள் இயக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கரூரைப் பொறுத்தவரையில் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி கரூர் பேருந்து நிலையத்தில் 60 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றது. மேலும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கி வருகிறது. போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருவண்ணாமலையைப் பொறுத்தவரையில் இன்று காலை 07.00 மணி நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளில் இருந்தும் 95 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றது. மேலும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் , காலை நிலவரப்படி 1200 பேருந்துகள் இயங்க வேண்டிய சூழலில், தற்பொழுது வரை 950 க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விழுப்புரம் போக்குவரத்து துறை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர் பேருந்துகளும் கிராமபுறபேருந்துகள் 758 இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் கோட்டத்தில் 50 சதவிகித பேருந்துகள் பணிமனைகளில் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கனிமசமான எண்ணிக்கையிலும் திருச்சி, மதுரை, சென்னை, கடலூர் போன்ற நகரங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.
சேலம் கோட்டத்தில் இருந்து அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, கரூர், கோவை, திருச்சி, நாமக்கல், சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளானது இயக்கப்பட்டு வருகிறது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை செல்லக்கூடிய 144 பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.