செங்கல்பட்டு அருகே 6 பேர் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்தில் தலைமறைவாக இருந்த ஓட்டுநர் முரளி கைது செய்யப்பட்டுள்ளார். 


கடந்த ஜூலை 8 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் சென்றுக்கொண்டிருந்த  லாரியும்  எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக்கொண்டது. இந்த  விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பேருந்தில்  பயணித்த 2 பெண்கள் உட்பட 6பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியான நிலையில் பத்திற்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.





இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அச்சரபாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்தில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டனர். இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து காரணமாக அன்றைய தினம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 





இவ்விபத்து  குறித்து அச்சரப்பாக்கம்  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலரும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதேசமயம் விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். 

 

இந்நிலையில் பேருந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கடலூரைச் சேர்ந்த ஓட்டுநர் முரளியை அச்சரப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.