(Source: ECI/ABP News/ABP Majha)
இது அனைவருக்குமான அரசு; காவல்துறை நெஞ்சுரத்தோடு கடமையைச் செய்யும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் இந்த அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ஆம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாட்டின் தலைநகரில் தனது வீட்டின் முன்னாலேயே ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று (ஜூலை 9) நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:
‘’பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.
எளியோர் நலன் காக்கும் அரசு
இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!’’
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.