Bhogi Air Quality Chennai: போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததன் மூலம், சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.


போகி பண்டிகை:


”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அந்த தீயிலேயே தண்ணீரை காய்ச்சி, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, இறைவழிபாட்டிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதனால், இன்று முதலே பொங்கல் பண்டிகை கொண்டாட்டமானது தமிழ்நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது.


காற்று மாசு:


ஆரம்பகாலங்களில் பழைய முறம், உடைந்து போன மரக்கூடை, கிழிந்து பயன்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் உடைகள், கோணிப்பை, துடைப்பம் ஆகியவற்றை எரித்தனர். இதோடு, கிராமப்புறங்களில் வயல்பகுதிகளில் கிடைக்கும், போகி முல்லை வெட்டி வந்து கொளுத்துவதும் உண்டு. அப்போது காற்று மாசு என்ற பிரச்னை பெரிதாக இருந்ததில்லை. ஆனால், நகரமயமாக்குதல் அதிகமானது பிறகு, போகிப் பண்டிகை கொண்டாட்டம் என்பதே பெரும் மாற்றம் கண்டுள்ளது. பாரம்பரிய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற கட்டாயத்தில் பலரும்,  டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்பட்டு, காற்று மாசு ஏற்படும் சூழல் நிலவுகிறது.


சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்:


அந்த வகையில் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இன்று போகிப் பண்டிகைக்காக, அதிகாலை முதலே தங்கள் வீட்டின் வாசலில் தீமூட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதில் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை கண்ணார காணமுடிகிறது. அதிலிருந்து வெளியேறும் நுண்ணிய துகள்கள், கொட்டும் பனியில் கலந்து அப்படியே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமடந்துள்ளது. வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் 200-ஐ கடந்து, சுவாசிக்கவே தகுதியற்றதாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், சுவாசப் பிரச்னை கொண்டு இருப்பவர்கள் முடிந்தவரையில் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புகையில்லா போகியை கொண்டாடுவோம் என அரசு பலமுறை வலியுறுத்தியும், பொதுமக்கள் அதனை சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என்பதையே சென்னை நிலவரம் காட்டுகிறது.


விமான சேவை பாதிப்பு:


விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதியிலும் கடும் மனிமூட்டம் நிலவுகிறது. இதனால், சிங்கப்பூர், லண்டனில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல்  ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி, மஸ்கட் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடி உள்ளன. புகைமூட்டம் தொடர்ந்தால், விமானங்களை  பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே, அந்தமான், புனே, மும்பை , டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத் மற்றும் மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதனால்,பயணிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.