firecracker factory Blast: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில், ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு ஆலை வெடிவிபத்து - 6 பேர் பலி:
அப்பைய நாயக்கன்பட்டியில் உள்ள சாய்நாத் எனப்படும் தனியார் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தகவலிறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், அவரும் படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில் சடலாமகவே மீட்கப்பட்டார். இதனால், விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் பற்றிய உரிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பட்டாசு தயார் செய்யும் போது ஏற்பட்ட மின்கசிவு அல்லது வெடிபொருட்களுக்கு இடையேயான உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்:
விருதுநகர் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு கூட முதலமைச்சர் ஸ்டாலின், சாத்தூரில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி, சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த செவல்பட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி மாயத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற்ற விபத்தில் 2 பேர் பலியாகினர். கடந்த ஜுலை மாதம் சிவகாசி அடுத்த காளையார்குறிச்சியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த மே மாதம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்தனர்.