Annamalai Ashwin: இந்தி தேசிய மொழி அல்ல என தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசியிருந்தார்.


”இந்தி” பற்றிய அஷ்வினின் கருத்து


சென்னைக்கு அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின், தான் எந்த மொழியில் பேச விரும்புகிறார்கள் என்று மாணவர்களிடம் கேட்டார். அதன்படி, " இங்கே உள்ள ஆங்கில மாணவர்களே - கரகோஷம் எழுப்புங்கள்" என்று கூறினார். மாணவர்கள் உரத்த ஆரவாரம் எழுபினர். பின்னர் தமிழில் பேசவா என கேட்டதும் மாணவர்களிடமிருந்து இன்னும் பலத்த கர்ஜனை எழுந்தது. இறுதியாக இந்தியில் பேசவா என கேட்டபோது, பெரும் அமைதி நிலவியது. தொடர்ந்து,   "இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்தி நமது தேசிய மொழி அல்ல அது ஆட்சி மொழி மட்டுமே" என்று அஷ்வின் தமிழில் பேசியிருந்தார்.



அண்ணமாலை விளக்கம்:


அஷ்வினின் பேச்சு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “சரியான கருத்து தான். இந்தி தேசிய மொழி அல்ல. அண்ணாமலையும் அதை தான் சொல்கிறான். என் அருமை நண்பர் அஷ்வின் மட்டும்தான் சொல்ல வேண்டும் என இல்லை. இந்தி தேசிய மொழி இல்லை. அது ஒரு இணைப்பு மொழி. இது வசதிக்கான மொழி. மேலும் இந்தி தேசிய மொழி என்று நான் எங்கும் கூறவில்லை அல்லது யாரும் கூறவில்லை, அஸ்வின் ஜி சொன்னது சரியான கருத்து" என பதிலளித்துள்ளார்.


தமிழ்நாட்டில் ”இந்தி திணிப்பு” என்பது பெரும் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. பல அரசியல் மாற்றங்களுக்கான தொடக்கப்புள்ளியே அதுதான்.  இன்றளவும் மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக  பல போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் உள்ளன. 


தொடரும் இந்தி திணிப்பு சர்ச்சை


கடந்த ஆண்டு அக்டோபரில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், சென்னை தூர்தர்ஷனின் பொன்விழா கொண்டாட்டங்களை, இந்தி மாதக் கொண்டாட்டங்களுடன் இணைத்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ” இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை இந்தி அல்லாத மாநிலங்களில் கொண்டாடுவது தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.


மேலும், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி அந்தஸ்தை வழங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியா போன்ற பன்மொழி நாட்டில், இந்தி மொழிக்கு சிறப்பு இடமும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதத்தைக் கொண்டாடுவதும் மற்ற மொழிகளை இழிவுபடுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது" என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.