தன்னை விமர்சித்துப் பேசுபவர்களின் கருத்து சுதந்திரத்தை திமுக பறிக்கிறது என்றும் அவ்வாறு அறிவாலயத்தின் மமதையால் கைதான தேசியவாதிகளுக்கு பாஜக உதவும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
பாஜகவின் கல்யாணராமன், யூடியூபர் மாரிதாஸ் ஆகியோரை ஆதரித்து, ட்வீட் செய்துள்ளார் அண்ணாமலை. அவருடைய ட்வீட்களைப் பார்ப்போம்.
யார் இந்த கல்யாணராமன? மாரிதாஸ்?
அண்ணாமலை தேசியவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ள கல்யாணராமன், மாரிதாஸ் யார்? அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்?
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் தமிழக பாஜக நிர்வாகி ஆவார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இருந்து பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இவருடைய பதிவுகள் அனைத்தும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியதாக இருப்பதாகவும், இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் முஸ்லீம் இளைஞர்களை வன்முறை பாதைக்கு மாற்ற வேண்டும் என்பதே கல்யாணராமனின் நோக்கம் என்று இஸ்லாமியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இஸ்லாம் மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கடந்த ஜனவரி மாதம் கைதான கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுகுறித்த விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர் இப்போது சிறையில் இருக்கிறார்.
மதுரை மாரிதாஸ்..
தமிழ்நாட்டில் உள்ள யூ ட்யூபர்களில் ஒருவர் மாரிதாஸ். இவர் தனது யூ டியூப் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஏற்கெனவெ தனியார் தொலைக்காட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் என்பதும், அதன் காரணமாக அவர்கள் பணி விலக்கம் செய்யப்பட்டதும், விலகியதும் குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
அவரது கைதை ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தான், திமுக தன்னுடைய அதிகார மமதையினால் விமர்சனம் செய்பவர்களுக்கு விலங்கு பூட்டுகிறது. திமுக அரசால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட தேசியவாதிகளுக்கு சட்டப்பூர்வ தீர்வுகளை, உதவிகளை தமிழக பாஜக செய்து வருகிறது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.