ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பு குறித்து எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் காலியாக உள்ள அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் பாமக போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவு அளிக்கவோ போவதில்லை என தெரிவித்துள்ளது. இதனிடையே அதிமுக கூட்டணி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அதிமுக இபிஎஸ் - ஓபிஎஸ் அணியாக பிரிந்துள்ள நிலையில் இருவருமே வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் இந்த கூட்டணியில் உள்ள பாஜக தனித்து போட்டியிடுவது பற்றியோ, கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றியோ அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.
இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் திமுக பணம் செலவு செய்ய தயாராக உள்ளது என குற்றம் சாட்டியதோடு, ஈரோடு பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து நிற்க பெரிய கட்சி ஆக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். "கூட்டணியில் அதிமுக பெரிய கட்சியாக உள்ளது. அதிமுகவில் இதற்கு முன்னால் ஜெயித்த வேட்பாளர்கள் இருக்கிறார்கள். தேர்வு செய்யப்படக்கூடியவர் பணம்,பலம், மனம் பலம் என அனைத்தையும் எதிர்கொள்ள கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். அந்த வேட்பாளரின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு , பாஜக வின் நிலைப்பாடு" என அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் நிற்கக்கூடிய ஒரு வேட்பாளரை வெற்றிபெற எல்லா வகையான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.
”இன்றைக்கு நம்முடைய பலம் என்ன, இரண்டு, மூன்று பிரிவுகளாக வாக்குகள் பிரியும் போது என்ன நடக்கும் என்பது தெரியும். இந்த கூட்டணியில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எதனையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவு செய்ய முடியாது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் பிரச்சினை உள்ளது. இன்றைக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஸ் இளங்கோவனின் பேச்சை மக்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் அரசியல் நோக்கத்திற்காக பாஜகவை குறை சொல்லலாம். ஆனால் கட்சியில் உள்ள மாவட்ட தலைவரே முழுமையாக அவர் பின்னால் நிற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது” என அண்ணாமலை கூறியுள்ளார்.