ஊர் பேருந்து படிக்கட்டில் தொங்கிச் சென்ற மாணவர்களை தட்டிகேட்டது மட்டுமின்றி, மாணவர்களை தாக்கிய வழக்கில், ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்தநிலையில், இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :

 

ரஞ்சனா நாச்சியார் என்பவர் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பேருந்தின் கூரையிலும் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை பதட்டத்தோடு கடிந்து கொண்டதோடு விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உணர்ச்சி வசப்பட்டு தகாத வார்த்தைகளால், திட்டியிருந்தாலும் அவை சமூக அக்கறையுடன் சமுதாய அக்கறையோடு செய்யப்பட்டவையாக தான் கருதப்பட வேண்டும்.

 

சட்டப்படி  நீதிமன்றத்தில் எதிர்கொள்ளட்டும்.

 

அவரின் கடின வார்த்தைகள் தவறு தான், ஆனால் அந்த வார்த்தைகள் அந்த நேரத்திற்கான தவிர்க்க முடியாத  தேவை தான் என கருதுகிறேன். மாணவர்களை கை நீட்டி அடித்தது சட்டப்படி குற்றம் தான், ஆனால், அது தார்மீக கோபத்தினால், மாணவர்களுக்கு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்ற அக்கறையினால் நிகழ்ந்தது என்பதை சிறு குழந்தை கூட சொல்லும். நடத்துனரை ஒருமையில் பேசியது சட்ட விரோதமாக இருந்தாலும், அரசு ஊழியர்களின் அலட்சியத்தை தட்டி கேட்காத அதிகாரிகளின் பொறுப்பின்மையினால் எழுந்த கோபம் என்றே எடுத்து கொள்ளப்பட வேண்டும். அவர் விளம்பரத்திற்காக அதை செய்திருந்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அதை வரவேற்பதில் தவறில்லை. அரசின் அலட்சியத்தை, அதிகாரிகளின் மெத்தனத்தை வெளிக்கொண்டு வந்ததால் அது குற்றமில்லை என கருதப்படலாம். ஆனால், அதையெல்லாம் மீறி, வழக்கு தொடர்ந்து கைது செய்தே  தீர வேண்டும் என்று அரசு நினைத்தால் சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளட்டும்.

 

" எழிலரசனை கைது செய்ய வேண்டும் "

 

ஆனால், சமூக அவலத்தை கண்டித்த ரஞ்சனா நாச்சியாரை கைது செய்த தமிழக காவல்துறை, பொது மக்கள் முன்னிலையில் நமது பிரதமரை தரக்குறைவாக பேசிய, ஒருமையில் விமர்சித்த தி.மு.க வின் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை கைது செய்யாதது ஏன்? சட்டமன்ற உறுப்பினர் சட்டத்தை மீறலாமா? தரக்குறைவாக பேசலாமா? அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்காதா? சிறைக்கதவுகள் அவருக்கு திறக்காதா? அரசு இயங்காதா? யார் தவறு செய்தாலும் தண்டிப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அந்த அரசை பொறுப்பேற்று நடத்தும் முதல்வருக்கு பெருமை. சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கைது செய்யப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்