வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க எந்த கட்சியையும் கட்டாயப்படுத்தவில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இதற்கிடையில் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 14 பேரும், காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் சந்தித்து பாஜகவில் இணைந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ பாஜகவில் இன்று ஏராளமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இணைந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மோடி வரவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இது. தேசிட ஜனநாயகக் கூட்டணி யார் சேர நினைத்தாலும் அதற்கு கதவுகள் திறந்து இருக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்டு எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எங்கள் கதவும் எல்லோருக்கும் திறந்து இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியவர் பாஜக, இதில் யார் இருக்கிறார்கள் யார் இல்லை என நாங்கள் கூறவில்லை. மோடி தான் மூன்றாவது முறையும் வெற்றி பெறுவார் என தெரிந்து நடக்கும் தேர்தல் இது” என கூறியுள்ளார்.