சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வு விவகாரம் குறித்து சேலம் இரும்பாலையில் பணியாற்றும் அம்மாசியப்பன் என்பவர் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் இரும்பாலை செயல் இயக்குனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அழைத்துள்ளனர். அந்த மனுவில், அம்மாசியப்பன் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தது, அரசுக்கு எதிராக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது மற்றும் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளனர். 



மேலும், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசியப்பன் நிலம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த நபர் என முறைகேடாக இரும்பாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும், திமுகவிற்கு கொள்கை பரப்புச் செயலாளர் போல பணியாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக நிர்வாகிகள் அவர் மீது இரும்பாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இரும்பாலை வளாகம் முன்பு பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.