தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும் பொழுது, “தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்” என்றார். தமிழ்நாடு தனி நாடு என்று ஆ. ராசா பேச்சை குறிப்பிட்டு தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனி நாடு பற்றி நான் பேசவில்லை. அது அவருடைய சொந்த கருத்து. ஆனால் என்னுடைய ஆசையும் அது தான். ஆ. ராசாவுக்கு தனி நாடு வேண்டும் என்ற ஆசை இருந்தால் எனக்கும் தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்போது தான் நிர்வாகம் செய்ய முடியும். நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி, தென்காசியை இரண்டாக பிரித்தனர். ஆ. ராசா சொன்ன பிறகே எனக்கும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இரண்டாக பிரித்தால் இன்னும் பல திட்டங்களை கொண்டு வர முடியும்.
ஒரு மாநிலத்தில் இரண்டு இஞ்சின் ஒரே இடத்தில் இருந்தால் தான் நல்லபடியாக ஓட்ட முடியும். பாஜக ஆட்சி தமிழகத்திலும் மத்தியிலும் இருந்தால் தான் நல்ல பல திட்டங்களை கொண்டு வர முடியும் என்பது என்னுடைய யோசனை. நாங்களும் கேட்போம் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும், எப்படி ஆந்திரா, தெலுங்கானா பிரிந்து இருக்கிறதோ. அதேபோன்று தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்.. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறலாம்” என்று கூறினார்.
மேலும், “எப்போதாவது வெற்றி பெறக்கூடிய திமுக இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு மூன்று காரியங்களை மட்டும் செய்து இருந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி முதலமைச்சர் ஆகியிருப்பார்” என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்