புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அழைத்து அவமதித்ததாக கூறி பாஜக எம்.எல்.ஏ பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஏற்கனவே குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பட்டங்களை வழங்குவார்கள் என அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் குடியரசு துணைத் தலைவரின் வருகை ரத்து செய்யப்படுவதாகவும் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது,
இந்நிலையில் இன்று மதியம் பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தார். மேலும் அழைப்பிதழ் முறையாக வழங்கப்படவில்லை என முதலமைச்சரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சிறப்பு விருந்தினராக அழைப்பிதழில் பெயர் இல்லாத ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் பங்கேற்றார். மேலும் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு வரவேற்பு பேனரும் வைக்கப்பட்டிருந்தது, மற்ற யாருக்கும் வரவேற்பு பேனர் கூட வைக்கப்படாத நிலையில் பட்டமளிப்பு விழா தொடங்கியதும் அரை மணி நேரத்திற்கு மேலாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மட்டுமே மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வந்தார்.
மேலும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி துணை வேந்தர் தெரிவித்து பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அழைத்து அவமதித்ததாக கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மேடையிலேயே துணை வேந்தர் குருமீத்சிங்கிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்தும் அவர் சமாதானம் ஆகாததால் மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து உடனடியாக தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர் தெரிவித்ததை தொடர்ந்து பட்டமளிப்பு நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி நடைபெற்றது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் பட்டமளிப்பு விழா மேடையிலேயே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்