தமிழ்நாட்டின் அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாக மாறியுள்ளது. திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வந்த நிலையில், முதன்முறையாக இரு கட்சிகளையும் வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது.

Continues below advertisement

புதிய தலைவலி அண்ணாமலை:

விஜய் தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தால் திமுக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. மிக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதிய திமுக-வை வீழ்த்தியதுடன் அந்த கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலினையே தவெக தோற்கடித்தது அவர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. மிகப்பெரிய அளவில் திமுக-விற்கு தவெக தோல்வியைத் தந்து தலைவலியாக அமைந்தது. 

இந்த சூழலில், தவெக-விற்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பாஜக-விற்கு பெரியளவு வரவேற்பு இல்லாமலே இருந்து வருகிறது. கட்சி கீழ்மட்ட அளவில் வளராமலே இருந்த சூழலில், தமிழிசை செளந்தர்ராஜனுக்கு பிறகு எல்.முருகன் தலைவராக பொறுப்பெடுத்தார். 

Continues below advertisement

ஆதரவாளர்கள்:

அவர் மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழக பாஜக-வின் தலைவராக பொறுப்பெடுத்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவரது தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. அரசியல் வெற்றியைப் பெறாவிட்டாலும் கட்சி ரீதியாக பாஜக-வை கீழ்மட்ட அளவில் அண்ணாமலை வலுப்படுத்தினார். மேலும், திமுக மற்றும் அதிமுக மீதான அதிருப்தியாளர்கள் அண்ணாமலையின் பேச்சு மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆனார்.

அண்ணாமலையின் தனிப்பட்ட செல்வாக்கு வளர்ந்தாலும் பாஜக வளராமலே தமிழகத்தில் இருந்து வந்த சூழலில், உட்கட்சி மோதலாலும் அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகி தனி இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த சூழலில், இன்று அவர் தனது வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டை பொள்ளாச்சியில் நடத்தினார்.

2031 தேர்தலில் போட்டி:

அரசியல் கட்சியாக இது மாற வேண்டும் என்பதை திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்த அண்ணாமலை, 2031 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதையும் மறைமுகமாக உறுதி செய்தார். அண்ணாமலை இன்று நடத்திய இந்த கூட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பங்கேற்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இளைஞர்களின் வாக்குகளே ஆகும். அண்ணாமலையும் இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்திருப்பது அவரது உரையில் வெளிப்படையாக தெரியவந்தது.  

தமிழ்நாட்டில் மிகவும் வலுவான கட்சியான திமுக-விற்கு அதிமுக மட்டுமே போட்டியாக இருந்து வந்த நிலையில், தவெக எனும் புதிய போட்டி கடந்த தேர்தல் மூலம் உருவாகியது. இன்று பேசிய அவர் ஆளுங்கட்சியான தவெக-வை மிகப்பெரிய அளவில் தாக்கிப் பேசவில்லை. அதேசமயம், குடும்ப கட்சி அல்ல என்று மறைமுகமாக திமுக-வை விமர்சித்தனர். இந்த சூழலில், தனக்கென மிகப்பெரிய வரவேற்பையும், ஆதரவையும் உருவாக்கிக் கொண்டுள்ள அண்ணாமலையும் அடுத்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குவார் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதற்கு அவர் நடத்திய இந்த கூட்டமே ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இதனால், 2031ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு அதிமுக, ஆளுங்கட்சி தவெக மட்டுமின்றி அண்ணாமலையும் புதிய தலைவலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.