கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிழல் குடை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, தரமற்ற முறையில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மீது பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை அரசு கலைக் கல்லூரி அருகில் அமைந்துள்ள கரூர் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை உட்பட கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 16 பேருந்து நிழற்குடை கட்டுமானத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்து கரூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் நவீன் குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். நிழல்குடை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு பங்கு இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து என்னென்ன பணிகள் நடந்திருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்டிருந்தோம். அதில் கரூர் மாவட்டத்தில் 16 பஸ் ஸ்டாப் கட்டப்பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். எம்.பி நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிழல் குடையில் எந்த ஒரு மதிப்பீடும் இல்லை. அரசு வேலைகளில் அனைத்தும் மதிப்பீடு இருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாங்கள் கேட்ட பொழுது பேருந்து நிழல் குடையின் மதிப்பீடு 15 லட்சம் என்று சொல்லி உள்ளனர். இரண்டு தூண் 2 அடி பேஸ்மென்ட் இதற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து பணம் எடுத்து உள்ளனர். இதுபோல 16 இடத்தில் உள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு 1 கோடியை 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
இதில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கும் பங்கு இருக்கும் என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் வைக்கிறோம். இதுகுறித்து கரூர் மாநகராட்சியில் தகவல் கேட்ட பொழுது, வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ரசீதுகள் தகவல்கள் இல்லை என்று கூறியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும், சதுரமாக வரைந்து வரைபடம் என்று கூறியுள்ளனர். இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை வழங்கிக் கொண்டுள்ளது கரூர் மாநகராட்சி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கும் இந்த ஊழலில் பங்கு உள்ளது என்று நாங்கள் உறுதியாக சொல்கிறோம்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். டெல்லியில் உள்ள லோக்பால் அமைப்பு மற்றும் தமிழக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியுள்ளோம். ஊழல் உறுதி செய்யும் பட்சத்தில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். புகைப்படம் வர வேண்டும் என்பதற்காக இந்த மாடல் பஸ் ஸ்டாப் கட்டப்பட்டுள்ளதாகவும், இதில் ஊழல் நடந்துள்ளது என்று தெரிய வந்தால் தமிழக மக்களே இந்த புகைப்படத்தை எல்லாம் எடுத்து விடுவார்கள் என்று கூறினார்.