BJP Annamalai; ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ”செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறியதை ஆதாரத்துடன் ஆளுநருக்கு வழங்கியிருப்பதாக கூறினார். தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் அதிக அளவு கூடக்கூடிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.
மத்திய அரசின் வீடு தோறும் குடிநீர் திட்டத்தில் மாநில அரசு ஏராளமான முறைகேடு செய்திருப்பதை ஆதாரத்துடன் ஆளுநரை சந்தித்து வழங்கியிருப்பதாகவும் தமிழகம் முழுவதும் லஞ்சம் அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டி இருப்பதாக அண்ணாமலை கூறினார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநரிடம் பாஜகவின் நிலைப்பாட்டை தெரிவித்து இருப்பதாகவும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த போதிலும் சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்யவில்லை" என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை வைத்தார். சரியான சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி எனவும், சட்டத்தின் மீதான சில சந்தேகங்களையும் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
காவல்துறை உயர் அதிகாரிகள் சாதாரண மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என சொல்லுவதற்கு கூட தயங்குவதாகவும் அண்ணாமலை கூறினார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விவகாரத்தில் ஆளுநர் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டு திமுக அரசு தப்பிக்க முடியாத எனவும் ஆளுநர் ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு அரசாணையைக் கூட மாநில அரசு பிறப்பிக்கவில்லை எனவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஆளுநர் பதவி காலாவதியான பதவி என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சட்டை கிழிந்த நிலையில் மு.க. ஸ்டாலின் சந்தித்த முதல் நபர் ஆளுநர் தான் என்பதை கனிமொழி கவனத்தில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறினார்.