தஞ்சாவூர்: தென்னை சாகுபடியில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் முக்கிய பூச்சிகளில் ஒன்றான ருக்கோஸ் சுருள் வெள்ளை ஈ (Rugose Spiralling Whitefly) தாக்குதலை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பயிர் பாதுகாப்பு இயக்கக இயக்குனர் டாக்டர் மூ. சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னையில் வேகமாக பரவி வரும் ருக்கோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலின் தன்மை, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் மற்றும் அவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயிரியல் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில், வெள்ளை ஈக்கள் தென்னை இலைகளின் அடிப்பகுதியில் தங்கி சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியையும் மகசூலையும் பாதிப்பதுடன், கரும்பூஞ்சை வளர்வதற்கும் காரணமாகின்றன என்றார். இதனால் இலைகளின் ஒளிச்சேர்க்கை திறன் குறைந்து, விளைச்சல் கணிசமாக குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக தேவையில்லாமல் இரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக மஞ்சள் ஒட்டும் பொறிகள் (Yellow Sticky Traps) அமைத்து வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை இயற்கை முறையில் குறைக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், வயல்களில் இயற்கையாக வாழும் 'என்கார்ஷியா' (Encarsia) ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தோட்டங்களில் ஆங்காங்கே வாழை, கல்வாழை அல்லது சீத்தா மரங்களை வளர்க்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் வெள்ளை ஈக்களின் இனப்பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்த முடியும் என்று விளக்கினர்.
அதேபோல், வெள்ளை ஈக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் முட்டைகளை அழிக்கும் திறன் கொண்ட 'கண்ணாடி இறக்கைப் பூச்சி' (Green Lacewing) மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த இரைவிழுங்கிப் பூச்சியின் ஹெக்டேருக்கு 1,000 முட்டைகள் என்ற அளவில் வயல்களில் விடுவதன் மூலம் வெள்ளை ஈ தாக்குதலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் திறம்பட கட்டுப்படுத்த முடியும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த உயிரியல் காரணிகள் அனைத்தும் ஈச்சங்கோட்டையில் உள்ள டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். அதன்படி, 1,000 கண்ணாடி இறக்கைப் பூச்சி முட்டைகள் கொண்ட தொகுப்பு ரூ.450-க்கும், என்கார்ஷியா ஒட்டுண்ணி இலை ஒன்று ரூ.10-க்கும் வழங்கப்படுகிறது.
இந்த உயிரியல் காரணிகளை வாங்க விரும்பும் விவசாயிகள் 94425 62567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பெறலாம் என்றும், 20 முதல் 30 விவசாயிகள் இணைந்து கூட்டாக கோரிக்கை வைத்தால், அவர்களின் பகுதிக்கே நேரடியாக கொண்டு வந்து வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் உயிரியல் பூச்சி மேலாண்மையின் அவசியம், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் பயிற்சியும் வழங்கப்பட்டது.
