பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக 17 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பாடகி புவனா ஷேசன் தெரிவித்துள்ளார்.
வைரமுத்து குவியும் குற்றச்சாட்டு:
பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக ஏற்கனவே சின்மயி உள்ளிட்ட பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால், இதுவரை அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான், பாடகி புவனா சேஷன் என்பவரும் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இளம் பாடகர்களின் திறமைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதை தடுக்கவே, எனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை தற்போது பகிர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
17 பேர் புகார்:
இதுதொடர்பாக பேசிய புவனா சேஷன் “சுமார் 17 பெண்கள் வைரமுத்துவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்களின் 5 பேர் மட்டுமே தைரியமாக தனது பெயரை கூறி வெளிப்படையாக பேசியுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் சூழ்நிலையிலிருந்து வெளிவருவது கடினம். தற்போது எனது கதையை பகிர்வதன் நோக்கமே, இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எங்களுக்கு நேர்ந்தது இளம்பாடகர்களுக்கு நேர்வதை நான் விரும்பவில்லை. பாடகி சின்மயியின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். வாழ்க்கை அவருக்கு கடினமாக இருந்தது. இது தொடரக்கூடாது. இதனால் பல பெண்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் ஏற்படபோவதில்லை. அரசாங்க அமைப்பு விசாரணயை நடத்த விடாது ” என கூறியுள்ளார்.
சின்மயி போரட்டம்:
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வைரமுத்து மீது சின்மயில் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரால் பாதிக்கப்பட்டு அமைதியாக உள்ள பிறரும் வெளிப்படையாக பேச வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறார். அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி ஆகியோரை டேக் செய்து டிவீட் செய்திருந்தார். அதில், பாதிக்கப்பட்ட பெண்களை தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி வைரமுத்து எவ்வாறு அமைதிப்படுத்தினார் என்பதை விளக்கியிருந்தார். அதோடு, வைரமுத்துவின் மகனும் அவரது குடும்பத்தினரும் தனது தந்தையின் செயல்பாடு தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்து இருந்தனர்.
”சட்டம் மாறுபடக்கூடாது”
வைரமுத்துவிற்கும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படும் பிரிஜ் பூஷன் சிங்கிற்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் பணியிடங்கள் பாதுகாப்பாக இருக்க, தேவையானதை செய்யுங்கள். வைரமுத்துவின் அரசியல் தொடர்புகள் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் அவருக்கு எதிராக பேசுவதற்கு மிகவும் பயப்படுவதால், எனது சொந்த துறையில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒருவராக நான் பேசுகிறேன் என, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் வலியுறுத்தி இருந்தார்.