தூத்துக்குடி தூத்துக்குடியில் 71 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றன. கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் தொழில் செய்ய மீனவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.



கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த  ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது.  

 

தடைகாலம் அமலுக்கு வந்ததால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துகுடி, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலை இழந்திருந்தனர். 

 

மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று, டீசல் விலை உயர்வு, மீன்வரத்து குறைவு காரணமாக மார்ச் மாதம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த ஆண்டில் மட்டும் 71 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. 






 



இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு விசைப்படகுகள் இன்று அதிகாலை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 240 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்துவரும் நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி  சுழற்சி முறையில் இன்று 120 விசைப்படகுகள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மீனவர்கள்‌ முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.