அதிமுகவின் வங்கிக்கணக்குகளை கையாள புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முழு அதிகாரம் என்ற ஈபிஎஸ் அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றனர். காசோலைகள், வங்கிக்கணக்குகளை கையாள திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த 12 ம் தேதி ஈபிஎஸ் கடிதம் எழுதினார். கடிதத்துடன், ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்ட நிலையில் ஈபிஎஸ் கோரிக்கையை ஏற்று சீனிவாசனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதாகவும், ஓபிஎஸ் தரப்பில் வெறும் கடிதம் மட்டுமே அளிக்கப்பட்டநிலையில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும் வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுகவின் புதிய பொருளாளர் நியமனம் செய்யப்பட்டது குறித்து வங்கிகளுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இனிமேல் அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை அவரே மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவும் மேற்கொள்ள கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வைஸ்யா வங்கிக்கு மேலாளருக்கு ஒருங்கிணைப்பாளர் என்கிற அடிப்படையில் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் கடந்த பல ஆண்டுகளாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நியமிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராகவும், 2017 முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். கட்சிக் கணக்கு எண். 1156115000011212, கட்சித் தலைமையக கட்டிட நிதிக் கணக்கை இயக்கி வருகிறேன். எண். 1156155000011563, அதிமுக கட்சி வளர்ச்சி நிதி கணக்கு எண். 1156135000005978 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரில் பல்வேறு நிலையான வைப்புத்தொகைகளுடன் பொருளாளராகவும் இருந்து வருகிறேன்.
இது தொடர்பாக, 11-07-2022 அன்று நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விரோதப் பொதுக்குழுக் கூட்டத்தில், எனக்குப் பதிலாக அதிமுக பொருளாளராக திரு திண்டுக்கல் சி.ஸ்ரீனிவாசனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும், இருப்பதால் இந்திய ஆணையம் மற்றும் விஷயங்கள் மாண்புமிகு. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு. இந்திய உச்சநீதிமன்றம், திரு திண்டுக்கல் சி.ஸ்ரீனிவாசன் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு யாரேனும் மேற்கூறிய கணக்குகளை இயக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதையும் மீறி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரில் மேற்கூறிய கணக்குகளை என்னைத் தவிர வேறு யாரேனும் இயக்க அனுமதித்தால், கணக்குகளை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது தவறாகப் பயன்படுத்தினால் அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்” என்று கரூர் வைசியா வங்கிக்கு கடிதம் எழுதினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்