தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் இன்று அதாவது அக்டோபர் 19ஆம் தேதி காலமானார். இவருக்கு வயது 82. இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி தனது இரங்கல் குறிப்பில், 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் மீதும் - கழகத்தலைவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மீகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸ்:
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரங்கல் குறிப்பில், ’மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவான அருள்திரு. பங்காரு அடிகளார் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பங்காரு அடிகளார் எனது சமகாலத்தவர் என்பதையும் கடந்து எனது குடும்ப நண்பர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையுண்டு என்பதற்கிணங்க ஆன்மிக வழியில் மக்களை முன்னேற்றவும், அவர்களுக்கு அமைதி வழங்கவும் உழைத்தவர். இறைவனுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு; அவர்களால் இறைவனை நெருங்க முடியாது; குறிப்பாக பெண்கள் கருவறையை நெருங்கக் கூட முடியாது என்று திட்டமிட்டு வழக்கங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் பங்காரு அடிகளார் தகர்த்தார். பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு.
பெண் குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துவது தான் தாம் அவதரித்ததன் நோக்கம் என்று பங்காரு அடிகளார் அடிக்கடி கூறுவார். அதற்கேற்ப மகளிர் முன்னேற்றம் என்ற உன்னத நோக்கத்திற்காக அருள்திரு. பங்காரு அடிகளாரும், ஆதிபராசக்தி சித்தர் பீடமும் ஆற்றிய பணிகள் போற்றத் தக்கவை. இயற்கையை போற்றியும், அனுசரித்தும் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்ற பங்காரு அடிகளாரின் அறிவுரை ஆன்மிக எல்லையை தாண்டி அனைவருக்கும் பொதுவானது. அவரது அறிவுரை எவ்வளவு உண்மையானது என்பதை காலநிலை மாற்றம் என்ற பெயரில் இன்று நடக்கும் நிகழ்வுகள் மூலம் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது.
அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்களின் கல்விப் பணியும் பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வியில் தொடங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை & அறிவியல், கல்வியியல் உள்ளிட்ட அனைத்து புலங்களிலும் பட்டம் வழங்கும் கல்லூரிகள் வரை தரமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவை வழங்குதல், கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க பொது மற்றும் பல் மருத்துவமனைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பள்ளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் என அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் வாயிலாக அருள்திரு.பங்காரு அடிகளார் மேற்கொண்ட பணிகள்அனைத்தும் பாராட்டத்தக்கவை.
பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அமமுக தலைவர் டிடிவி தினகரன், ‘கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
வேல்முருகன்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது இரங்கல் குறிப்பில், ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வந்த திரு. பங்காரு அடிகளார். உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறைக்குள் பெண்களே சென்று பூஜை செய்யலாம் என்கின்ற முறையை உருவாக்கி ஆன்மீகத்தில் பெரும் புரட்சி செய்தார்,சித்தர் பீடம் மூலமாக பல்வேறு மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடங்கி மருத்துவம் மற்றும் கல்விச் சேவை ஆற்றி வந்த அவரது இறப்பு மக்களுக்கு பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், அவரது பக்தர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.