திருச்செந்தூர் கோயில்- பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பில், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினுள், பக்தர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசி (Mobile Phone) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேற்படி நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக எதிர்வரும் 01.07.2026 முதல் கைபேசி பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையானது. மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
திருச்செந்தூர் கோயில்-மொபைல் போன் தடை
அதன் பொருட்டு. திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100/- விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்தக்குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே, திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவே, பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் போது தங்களது கைபேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பக்தர்கள். தமது கைபேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கைபேசி வைப்பிடங்கள் (Mobile Deposit Counter) நிறுவப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும்
பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக, மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி, பொது அறிவிக்கை அமைப்பு (Public Addressing System). ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி எதிர்வரும் 01.07.2026 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசியின்றி தரிசனம் செய்தலை முழுமையாக தேவையான ஒத்துழைப்பு நல்கிட பக்தர்கள் மற்றும் நடைமுறைப்படுத்த பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
