தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்ஃபோன் பயன்பாட்டுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்னதாக பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.


அதில், "கோயில்களின் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோயிலின் உள்ளே செல்போன் பன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு முன்னதாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயணா பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இணை ஆணையர், ”கோயிலில் செல்போன் பயன்பாட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


செல்போன்கள் பயன்பாட்டை கண்காணிப்பதற்காக தன் ஆர்வலக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. செல்போன்களை பாதுகாக்க அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது போன்ற அறிக்கையை தாக்கல் செய்தனர் அதன் அடிப்படையில் கோயில் பணியாளர்கள் உட்பட கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோயில் வளாகத்தில் செல்போன்கள் வைக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


 கோயிலுக்குள் வரும் பக்தர்கள் மரபினை காக்கும் வகையில்  உடை அணிந்து வர வேண்டும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர் நியமனம் செய்யவும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி இணை ஆணையர் ஏற்கனவே மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலை துறையின் ஆணையினருக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.


அதன்படி, கோயில்களின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.