தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட ஊருக்கு செல்வோருக்கு ஏதுவாக, 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
800 பேருந்துகள் இயக்கம்:
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “29/06/2023 அன்று பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 28/06/2023 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளளது.
சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 28/06/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை. மதுரை, திருநெல்வேலி, திருச்சி. சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்ரீத் கொண்டாட்டம்:
பக்ரீத் தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சூரியன் முழுமையாக உதித்த பிறகே மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடத்துகிறார்கள். மதியத் தொழுகை நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழுகைக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் பிரசங்கங்களில் கலந்து கொள்கிறார்கள்.சிறப்பு தொழுகைக்குப் பிறகு வீடு திரும்பும் மக்கள் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு ஆடுகளை குர்பானியாகக் கொடுத்து அதனைப் பகிர்ந்தளித்து உண்கிறார்கள். இந்நிலையில் வரும் 29ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். அவர்களது பயணத்தை எளிதாக்கும் நோக்கில், தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
பகிர்ந்தளித்தல், ஹஜ்:
உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் இந்த நாளில் இறைவனின் பெயரால் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட மிருகங்களை பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கினை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ள இஸ்லாமியர்கள் இதனை அடிப்படை ஹஜ் கடமைகளில் ஒன்றாக செய்ய வேண்டும். உணவு, மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது, ஏழை மக்களுக்கு உதவுவது, நபி இஸ்மாயிலை நினைவுகூறுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் இந்த நன்னாளை புத்தாடைகள் அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.