திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கு அடுத்தப்படியாக பூக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதிக்கும் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ஆரணி பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் தொடர் சுப முகூர்த்த தினங்கள் நடைபெறுவதாலும் பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலையேற்றம் உச்சம் தொட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், காஞ்சி, வெறையூர், எறையூர், திருவண்ணாமலை, கடலாடி , புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதில் மல்லிகை, முல்லை, ஜாதி, சம்மங்கி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வகை விவசாயம் நடந்து வருகிறது.


 


 




இப்பகுதிகளில் விளையும் பூக்கள் திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கர்நாடக மாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் பூக்கள் செங்கம் பகுதியில் இருந்து வாகனங்கள் மூலம் பூ கொண்டு செல்லப்படுகிறது. பரவலாக கர்நாடக மாநிலத்திற்கு செங்கம் பகுதியில் இருந்தே பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை நகரில் உள்ள தேரடி வீதியில் செயல்பட்டு வரும் ஜோதி பூ மார்க்கெட்டிற்கு ஆயுத பூஜையை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைவித்த பூக்களை அதிகாலையில் அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.  அந்த வகையில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த பூக்களின் விலை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


 


 




கடந்தாண்டு அதிக மழை பெய்ததால் பூக்கள் வரத்து அதிகரித்து விலை மாற்றம் இன்றி பொதுமக்கள் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு விவசாயிகள் பூக்களை விலை வித்து அறுவடை செய்து ஜோதி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்த நிலையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர், அதோடு மட்டுமல்லாமல் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை செய்வதற்காக பூக்களை வாங்க வந்த பொதுமக்கள் ஒரு கிலோ பூ வாங்குவதற்கு பதிலாக விளையேற்றத்தை கண்டு அரை கிலோ பூக்களை வாங்கி செல்கின்றனர். ஆயுத பூஜையை முன்னிட்டு ஜோதி பூ மார்க்கெட்டில் மல்லிப்பூ 600 ரூபாயும், முல்லை 550 ரூபாயும், ஜாதி மல்லி 350 ரூபாயும், சாமந்தி 200 ரூபாயும், சம்பங்கி 300 ரூபாயும், கோழிகொண்டை 50 ரூபாயும், பட்ரோஸ் 300 ரூபாயும், பன்னீர் ரோஸ் 250 ரூபாய் என மற்ற நாட்களை விட இன்று பூக்களின் விலை இரண்டு மடங்கு விற்கப்படுவதால் ஒரு கிலோ பூ வாங்க வந்தவர்கள் விலை ஏற்றத்தை கண்டு அரை கிலோ கால் கிலோ என்று பூக்களை வாங்கி செல்கின்றனர்.