விழுப்புரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் ஆரோவில்லில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
காணும் பொங்கல் திருவிழா
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான இன்று, தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்
புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், கடற்கரைச் சாலை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் உசுட்டேரி போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கூடி பொழுதைக் கழித்தனர். விடுமுறை தினமான இன்று, வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் சென்று காணும் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆரோவில் குயிலாப்பாளையத்தில் மஞ்சுவிரட்டு விழா
புதுச்சேரி அருகே சர்வதேச நகரமான ஆரோவில்லில் அமைந்துள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய மஞ்சுவிரட்டு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட காளைகள்:
குயிலாப்பாளையம் மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஊர் மக்கள் தங்கள் வீட்டு மாடுகள் மற்றும் கன்றுகளைக் கொண்டு வந்தனர். மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்திருந்தனர்.
சினிமா நட்சத்திரங்களின் படங்கள்: ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக, ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி சினிமா நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டும் மாடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வழிபாடும் வீரவிளையாட்டும்:
மாரியம்மன் கோவில் முன்பு மாடுகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின், மஞ்சுவிரட்டு தொடங்கியது. சீறிப்பாய்ந்த மாடுகளை இளைஞர்களும், சிறுவர்களும் உற்சாகத்துடன் விரட்டிச் சென்று விளையாடினர்.
வேட்டி, சேலை அணிந்த வெளிநாட்டுப் பயணிகள்
இந்த விழாவின் சிறப்பம்சமாக, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர். தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால், வெளிநாட்டினர் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தது காண்போரைக் கவர்ந்தது.
நேர்த்திக்கடனும் நம்பிக்கையும்
மஞ்சுவிரட்டின் போது, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக மணிலா, எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன.
இவ்வாறு வீசப்படும் பழங்களை அம்மனே வழங்குவதாக மக்கள் நம்புகின்றனர். இதனைப் போட்டி போட்டுப் பிடித்துச் சென்றால், தங்கள் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. ஆரோவில் பகுதியில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு விழா, உள்ளூர் மக்களின் கலாச்சாரத்தையும், வெளிநாட்டினரின் பங்கேற்பையும் ஒன்றிணைத்து ஒரு சர்வதேச விழாவாகக் காட்சியளித்தது.
