தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்றும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் 11 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என குறிப்ப்பிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் கணிசமாக குறையும் என்றும் வெப்ப அலை இன்னும் இரண்டு வாரத்திற்கு இருக்காது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் / இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டர்ரில்)
கொல்லிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) 7, குடிதாங்கி (கடலூர் மாவட்டம்), சத்தியார் (மதுரை மாவட்டம்) தலா 5, ஆழியார் (கோயம்புத்தூர் மாவட்டம்) 4, சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்), கிளென்மோர்கன் (நீலகிரி மாவட்டம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்), பேரையூர் (மதுரை மாவட்டம்), வால்பாறை (கோவை மாவட்டம்), அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்), வானமாதேவி (கடலூர் மாவட்டம்), மேல் கூடலூர், புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்), நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), தொழுதூர் (கடலூர் மாவட்டம்) தலா 3 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.