Jayalalithaa Death: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின் போது கட்டுபாடற்ற உணவுகள் வழங்கப்பட்டதாக நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்து வந்த ரிப்போர்ட் மட்டுமே ஜெயலலிதா மற்றும் அவரது உடல் நிலை குறித்த அப்டேட்டுகளாக இருந்தது. முதலில் சாதாரண காய்ச்சல் என்று கூறப்பட்ட நிலையில்,  அதன் பின்னர் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்பட்டது. 


அதன் பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள்கள் எழுந்தது. குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது அணியில் இருந்த பலரும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறிவந்தனர். அதிமுக தரப்பில் பலரும் பல வகையில் பேசி வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 


அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் முழு விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார். தமிழில் 608 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட விசாரணை அறிக்கை இன்று (அக்டோபர்,18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுகளை தவிர்த்து கட்டுபாடற்ற உணவு வழங்கப்பட்டுள்ளது. 


அதுவும் குறிப்பாக, சிகிச்சையின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட கட்டுப்பாடற்ற உணவால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மேலும், மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், “சிகிச்சையின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு  உயர்தர சாக்லெட் நிற ஐஸ்கீரீம்கள், அரிசி உணவு, இட்லி, வெண் பொங்கல், தக்காளி சாதம், கேக் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டுள்ளன. 


பொட்டாசியம் மற்றும் சர்க்கரை உணவுகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை காரணமாக தவிர்த்து இருக்க வேண்டும். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடும் இன்றி உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட உணவு முறையால்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைய காரணமாக இருந்துள்ளது” என நீதியரசர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.