ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் நேற்று ஆஜராகி பரபரப்பான வாக்கமூலம் அளித்தார். இந்த நிலையில், இன்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான வாக்குமூலத்தை அளித்து வருகிறார். 


உணவு இடைவேளைக்கு பின் கூடிய ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலோவோ அவரது குடும்பத்தினரோ எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை என்று பரபரப்பான வாக்குமூலத்தை விசாரணையில் அளித்தார்.  முன்னதாக, உணவு இடைவேளைக்கு முன்பு ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அன்றும், இன்றும் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது என்று கூறினார்.


மேலும், கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு நான் அழுதபோது அழாதே பன்னீர், தைரியமாக இரு என்று ஜெயலலிதா தனக்கு ஆறுதல் கூறியதாகவும் அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்குமூலம் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.