ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுக்கொண்டு மற்றொரு சிறப்பு ரயில் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை வரவுள்ளது என பேரிடர்  மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். கடைசி நபர் பத்திரமாக மீட்கப்படும் வரை கவனமாக செயல்படுமாறு முதலமைச்சர் அறிவுருத்தியதாக கூறியுள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயிலில் வந்த 137 பேரில் 29 பேருக்கு காயம் இருந்தது. 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஒருவர் மட்டும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். 


மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில் யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை இங்கிருந்து ஒடிசா சென்ற தமிழ்நாடு குழு உறுதி செய்துள்ளது. கோரமண்டல் ரயிலில் தமிழ்நாட்டிற்கு  முன்பதிவு பெட்டியில் வந்து கொண்டிருந்த நரகாணி கோபி, கார்த்திக், ரகுநாத் மீனா, கமல், கல்பனா மற்றும் அருண் ஆகியோரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதேபோல் இவர்களைப் பற்றி தகவல் கேட்டு உறவினர்கள் யாரும் இதுவரை எங்களை தொடர்புகொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். 


அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர், ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை முற்றிலுமாக மீட்கும் வரை விழிப்புடன் செயல்பட உத்தரவிட்டுருக்கிறார். அதன்படி, இன்று காலை வந்த சிறப்பு ரயிலில் வந்தவர்களை தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேற்றோம். அதில்,  30க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுக்கள், 10க்கும் மேற்பட்ட  ஆம்புலன்ஸ்கள், கட்டணமில்லா டாக்ஸிகள் என தயார் நிலையில் இருந்தது.  






இன்று மதியம் சிறப்பு ரயில் வருவதைப் போல் நாளையும் ஒரு சிறப்பு ரயில் வரவுள்ளது. மேற்கொண்டு மற்றொரு சிறப்பு ரயில் இயக்கும்படி முதலமைச்சர் ரயில்வே துறையிடம் பேசியுள்ளார். ரயில்வே துறை அதிகாரிகள் நமக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர் என அவர் பேசினார்.