ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் யார்.?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை தேர்தலானது நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் களம் இறங்கவுள்ளனர். திமுக சார்பாக திருச்சி சிவாவும், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எல்.கே.சுதீஷ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் படி கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யார் இந்த கிறிஸ்டோபர் திலக்
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், சுதர்சனம் நாச்சியப்பன், தங்கபாலு ஆகியோர் போட்டி போட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிறிஸ்டோபர் திலக் பெயரை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தற்போது இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறையினர் மத்தியில் மிக முக்கியமான நபராக கிறிஸ்டோபர் திலக் உள்ளார்.
இதே போல அதிமுக சார்பாக 2 ராஜ்யசபா வேட்பாளர்களின் அதிமுக மூத்த தலைவர் தம்பி துரை பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடம் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அன்புமணி அல்லது சவுமியா அன்புமணி வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணியை திமுக மற்றும் அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது.
