மேலும் அறிய
Marina Beach rope car : இனி பறந்துட்டே பீச்சை ரசிக்கலாம்..! மெரினாவில் ரோப் கார்- சுற்றுலா பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு
Marina Beach rope car : சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கடந்தாண்டை விட இந்தாண்டு சென்னையில் உள்ள சாலைகளை சீரமைக்க மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு 62 அறிவிப்புகள் மட்டுமே இருந்த நிலையில் இந்தாண்டு 90 அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டுள்ளார்

Marina Beach rope car
Source : social media
சென்னை மாநகராட்சி பட்ஜெட்
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்தார். வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் வரவு ரூ.7,717 கோடி, மூலதன செலவினம் ரூ.2754.61 கோடி என மொத்த செலவினம் ரூ.9319 கோடியாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்தாண்டு 62 அறிவிப்புகள் மட்டுமே இருந்த நிலையில் இந்தாண்டு 90 அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டுள்ளார். குறிப்பாக சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கடந்தாண்டு 311.60 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் இந்த ஆண்டு 725.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மேயர்
- சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, தற்காலிக மற்றும் வெளிமுகமை தூய்மைப் பணியாளர்களுக்கும் கோடைக் காலங்களில் ஏற்படும் வெயில் தாக்கத்தை போக்கவும் நீர்ச்சத்தை பராமரிக்கவும் உடல் வெப்பத்தை தணிக்கவும் கோடை காலம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இடம்பெயரும் தொழிலாளர்கள், வீடில்லாத நபர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 200 தற்காலிக / இடைநிலை தங்குமிடங்கள் (கன்டெய்னர்- கொள்கலன் வீடுகள்) ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- பெருநகர மாநகராட்சியில் உள்ள நீர்நிலைகளை கண்காணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் ட்ரோன் ஆய்வு அமைப்பு ரூ.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
- சேத்துப்பட்டு, டாக்டர் குருசாமி பாலத்தை ஒட்டியுள்ள மெக்னிக்கல்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரயில்வே இருப்புப் பாதையின் குறுக்கே ஈ.வெ.ரா. பெரியார் சாலையை இணைக்கும் வண்ணம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை (3.60 மீட்டர்) அமைக்கப்படும்.
- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 250 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், மதிய உணவு சமையற்கூடங்கள், ஆய்வகங்கள், அரங்கங்கள், கழிப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர்கள் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு ஒரே மாதிரியான வண்ண குறியீடு (Color Coding) செய்ய ரூ. 20.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் 11 பேருந்துகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
- சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மெரினா கடற்கரையை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்காக கலங்கரை விளக்கம் (Light House) முதல் அண்ணா நினைவிடம் வரை கயிறு வழித்தட (Rope way car) வசதி அறிமுகப்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
- இந்த கயிறு வழித்தடங்கள், நகரத்தை ஒரு தனித்துவமான கோணத்தில் பார்க்க வழிவகை செய்வதுடன், சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்துகின்றன. இந்த கயிறு வழித்தடங்கள் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் அழகை ரசிக்க வைக்கும் பரந்த காட்சிகளை (Panoramic views) வழங்குவதோடு மறக்க முடியாத அனுபவங்களையும் உருவாக்கும் வகையில் பொது -தனியார் பங்களிப்பு (PPP) முறையில் கயிறு வழித்தடங்கள் (Rope way car) அமைக்கப்படும்.
- மெரினா, பெசன்ட் நகர், வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 20 முக்கிய பகுதிகளில் சீரமைக்கப்பட்ட ஸ்மார்ட் பார்க்கிங் (Smart Parking Management System) செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் சீரமைக்கப்பட்ட சாலையோர வாகன நிறுத்தம், டிஜிட்டல் மற்றும் QR குறியீடு வழி கட்டணம், கேமரா அடிப்படையிலான கண்காணிப்பு, டிஜிட்டல் பகுப்பாய்வு (Digital Analytics) போன்ற பணிகள் பொதுத்- தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் நகரம் முழுவதும் ஸ்மார்ட் பார்க்கிங் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் (Smart Partking) செயல்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























