மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள மாறுபாடுகள் மற்றும் அதிக வரிகளுக்கு பல தரப்பினரும் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.


அன்னபூர்ணா உணவக உரிமையாளர்:


கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பிரபல தனியார் உணவகமான அன்னபூர்னா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் இனிப்பு – காரம் குறித்த ஜி.எஸ்.டி. வித்தியாசம் குறித்து பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வானதி சீனிவாசன் முன்பு மன்னிப்பு கேட்ட வீடியோ இன்று இணையத்தில் வெளியானது. 


அன்னபூர்ணா உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனிமொழி எம்.பி., ஜோதிமணி எம்.பி. ராகுல் காந்தி எம்.பி., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த வீடியோவை பா.ஜ.க.வினர் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியுள்ளார்.  

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை:


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணிக உரிமையாளருக்கும் எங்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடல் வீடியோவை பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 






அன்னபூர்ணா உணவகங்களின் மதிப்பிற்குரிய உரிமையாளரான சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.