‛அம்மா’ என்கிற வார்த்தை தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. அரசியல், அரசு என்கிற பேச்சு வரும் போதெல்லம் அம்மா என்கிற வார்த்தை பரவிக்கிடக்கும். சில மாதங்கள் அது குறைந்திருந்தாலும், அவ்வப்போது அறிக்கையிலோ, பேச்சிலோ ‛அம்மா’ தவிர்க்க முடியாத வார்த்தையாகிறது. அரசியல்வாதிகளுக்கு தான் இந்த நிலை என்று இல்லை; வீட்டில் ஒவ்வொரு தினமும் அன்னையை அம்மா என்று தானே அழைக்கிறோம். அப்படி பார்த்தால், தமிழில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை அம்மா தான். ஆனால், நேற்று  கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்திவிட்டார்கள். இது வேறு அம்மாவின் கதை!



தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் பலர், தங்களை அம்மாவாகவே அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் அம்மா என்பது, ‛அம்மனை’ குறிக்கிறது. அம்மனுக்கு பல அவதாரம் உண்டு. இவ்வாறு வருவோரும், தங்களை அப்படி ஒரு அவதாரமாகவே கூறிக்கொள்வதும் உண்டு. அதில் சிலர், மக்களின் நன்மதிப்பை பெறுகிறார்கள். பலர், சர்ச்சையில் சிக்கி, சிறைகளுக்கு கூட செல்கிறார்கள். இது தமிழ்நாடு பார்த்து வரும் இயல்பான ஒன்று தான். 

இப்போது விசயம் என்னவென்றால், இந்த கோதாவில் புது வரவு... ‛அன்னபூரணி அரசு அம்மா’. நேற்று ஒரே நாளில், ஊரில் இருக்கும் ஒட்டுமொத்த பேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டிலும் இடம் பிடித்த பெயர். இடம்பிடித்தார் என்பதை விட, அடம்பிடித்தார் என்று தான் கூற வேண்டும். ‛அன்னபூரணி அரசு அம்மா’ புத்தாண்டில் புதுப்பொலிவுடன் அறிமுகமாகிறார் போலும். அதற்காக செங்கல்பட்டில் தரிசன ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. ‛அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே’ என்று தலைப்பிட்டு அவர்களே அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ‛அம்மாவின் திவ்ய தரிசனம்’ ஜனவரி 1, 2022 அன்று ‛தாயில் பாத கமலங்களில் தஞ்சமடைவோம்’ என்கிறார்கள் அந்த அறிவிப்பில். இலவச தரிசன அனுமதி வேறு. அந்த  அறிவிப்பில், அவரது யூடியூப் பக்கத்தையும் அறிவித்துள்ளனர். 


சரி... என்னதான் இருக்கிறது என்று போய் பார்த்தால், ‛இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’ என்பது போல் இருக்கிறது காட்சிகள். ஹோண்டா காரில் வந்திறங்கி, கால் வைத்த இடம் முதல், அரியணை ஏறும் வரை கால் வைக்கும் இடமெல்லாம் மலர் தூவி, பக்தர்கள் மனம் உருகி, பின்னணி இசையோடு வந்து சேர்கிறார் அன்னபூரணி அம்மா. ஸாரி... அரசை விட்டுவிட்டேன்; சேர்த்துக் கொள்ளவும். அரியணை ஏறியதும், உயர்த்தப்படும் வலது கரம், பணி முடியும் வரை இறங்குவதில்லை. அதன் பின் பக்தர்கள் எண்ட்ரி. தாயிடம் கதறுகிறார்கள்... தாய் கண்ணீர் வடிக்கிறார. அது தான் ஏன் என்று தெரியவில்லை. இதுவரை வந்த அம்மாக்களில் இவர் ஒரு புது ரகம். கண்ணீர் வடிய, தேம்பி தேம்பி அழுதபடி ஆசி வழங்குவது இவர் ஸ்டைல். 

அம்மாவின் கண்ணீரில், நாடி வந்த பக்தனின் கஷ்டம் எல்லாம் கரைந்து போகும் என, அவர்கள் அதற்கு விளக்கம் அளிப்பார்கள் என நினைக்கிறேன். இங்கு தான் எதுவும் நடக்குமே! இப்போ... என்ன பிரச்சனைனா... சம்மந்தப்பட்ட அன்னபூரணி அம்மா அவர்கள், ஸாரி... மறுபடியும் அரசை மறுந்துட்டேன்; அன்னபூரணி அம்மா அரசு அவர்கள், 2020 நம்பர் 5 ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது தான், இப்போது இந்த விவகாரத்தின் ஹாட் டாபிக்!

சர்வைவர் அப்போது இல்லை... பிக்பாஸ் நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகவில்லை.... அப்படி இருக்க... எந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருப்பார் என நீங்கள் நினைக்கலாம். அதுதாங்க... ‛சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி! அதாங்க... ‛என்னம்மா... இப்படி பண்றீங்களேமா...’ நிகழ்ச்சி தான். அவருக்கு அங்கு என்ன வேலை? ‛கஞ்சி குடிக்கலாம்... சாப்பிடாம கூட இருக்கலாம்... மானத்தை விடலாமா...’ என அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணியிடம் கேட்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்படி என்ன நடந்தது? 


கணவரை உதறிய அன்னபூரணியும், மனைவியை உதறிய அரசு என்பவரும் தகாத உறவில் இணைந்ததாக அவர்களின் குடும்பத்தார் முன்வைத்த பிராது மீது தான் அந்த விசாரணை நடக்கிறது. அதில் அரசு தான் எனக்கு வேண்டும் என்கிறார் அன்னபூரணி; அன்னபூரணி தான் எனக்கு வேண்டும் என்கிறார் அரசு. அன்னபூரணியின் முதல் கணவர், விவாகரத்து தருகிறேன் என்கிறார்; அரசின் மனைவி அதற்கு உடன்படவில்லை. ‛இத்தனை ஆண்டுகள் இருந்த என்னையே தூக்கி எறிந்துவிட்டார்; அந்த பெண்ணை எறிந்து என்னிடம் வருவார் என்கிற வாதத்தை வைக்கிறார் அரசின் முதல் மனைவி. ‛பாரும்மா அன்னபூரணி... நீ முடிவு எடு... நீ ஒரு நல்ல முடிவு எடுத்தால், உன் குழந்தைகள் உன்னிடம் வரலாம்... உன் கணவர் உன்னிடம் வரலாம்... ஒரு நல்ல முடிவா எடு அன்னபூரணி... நீ நல்ல பொண்ணு’ என, லட்சுமி வைத்த மூளை சலவை பேச்சை எல்லாம், கண்ணீர் மல்க கேட்ட அன்னபூரணி, ‛என்னை ஆவடியில் வெச்சி அசிங்கப்படுத்திட்டாங்க.. நான் எங்கே போறது மேடம்... ஊருக்கு கூட போகமுடியாது; அவ்வளவு அசிங்கப்படுத்திட்டாங்க... நாங்க கல்யாணம் பண்ணிட்டோம் மேடம்...’ என தனது ஸ்டாண்டில் உறுதியாக நின்றார் அன்னபூரணி. 


‛என்னால் அவளை விட்டுக்கொடுக்க முடியாது... எனக்கு அவள் வேண்டும்’ என உறுதியாக நிற்கிறார் அரசு. அன்னபூரணியம் உறுதியாகவே இருந்தார். இறுதியில் அரசின் குழந்தைகள் எல்லாம் வந்து டிசர்ட்டை கிழித்து அடித்தும் கூட, இறுதி வரை அவர்கள் தங்கள் உறவில் உறுதியாக இருந்ததால், இறுதி தீர்ப்பு வழங்க முடிவு செய்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ‛எக்கேடு கெட்டு போங்க...’ என்பது போல, இறுதியில் அந்த நிகழ்ச்சி முடிகிறது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே, கில்லி படத்தில் த்ரிஷாவை அழைத்துச் செல்வது போல,  அன்னபூரணியை அழைத்துச் செல்கிறார் அரசு. ‛வெளியேறிய அரசு-அன்னபூரணியை எங்களால் தடுக்க முடியவில்லை... யாராவது இவர்களை பார்த்தால் அன்பான அறிவுரை கூறுங்கள்...’ என்று முடிகிறது அந்த நிகழ்ச்சி!

இப்போது புரியுதா... ஏன் இவ்வளவு அறிவுரைகள் வந்து கொண்டிருக்கிறது என்று! 

‛ஏம்மா... இப்படி பண்றியேம்மா...’ என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியது, அன்னபூரணிக்கு ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் தான், ஏம்மா... என்பதை அம்மா என எடுத்துக் கொண்டு, ‛அன்னபூரணி அரசு அம்மா’ என ரீஎண்ட்ரி கொடுக்கிறார் போல என கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊர், உலகமே பார்த்த ஒரு பிரபல நிகழ்ச்சியில், தாங்கள் இடம் பெற்றதை அறியாமல், திடீரென கடவுள் அவதாரமாக களமிறங்கி, தற்போது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி. 

அந்த டிவி நிகழ்ச்சியில் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்த அதே அன்னபூரணி, இன்றும் குலுங்கி குலுங்கி அழுது ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு பாதகமலத்தில் தஞ்சமடைய சொல்கிறார். இந்த ஆண்டின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டின் இறுதியில் அரங்கேறியிருக்கும்  இந்த சர்ச்சை, வரும் ஆண்டை இன்னும் வளப்படுத்தும் என்றே தெரிகிறது. அதற்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லை... நியூ இயர்க்கு அம்மாவின் செங்கல்பட்டு வருகை இருக்கிறதாம்!